இளையர் அறிவியல் களஞ்சியம்/காரீயம்

விக்கிமூலம் இலிருந்து

காரீயம் : இது ஒரு தனிமம் ஆகும். ஒரு உலோகம் என்ற முறையில் பன்னூறு ஆண்டுகட்கு முன்பிருந்தே காரீயத்தைப் பற்றி அறிந்திருந்ததோடு அதைப் பயன்படுத்தியும் வந்தனர். ரோமானியர்கள் அக்காலத்தில் சிலை செய்யவும் தண்ணீர் தொட்டிகள், குழாய்கள் அமைக்கவும் காரீயத்தைப் பயன்படுத்தி வந்ததாகத் தெரிகிறது.

நீல வண்ணத்தோடு கூடிய சாம்பல் நிற காரீயம் மிருதுவாகக் காணப்பட்டாலும் இரும்பை விட உறுதியானதாகும். இதை எளிதில் வளைக்கலாம். காரீயம் எதனாலும் அரிக்கப் படுவதில்லை.

காரீயம் பெரும்பாலும் பிற உலோகங்களுடன் கலந்தே பயன்படுத்தப்படுகிறது. அச்சிடுவதற்கான அச்செழுத்துக்கள், துப்பாக்கிக் குண்டுகள், சாயங்கள் இவையெல்லாம் காரீயம் கலந்தே செய்யப்படுகின்றன. சில வகைக் கண்ணாடிகள் செய்யவும் காரீயம் பயன்படுகிறது.

காரீயம் தனிக் கனிமமாக இயற்கையாகக் கிடைப்பதில்லை. பிற உலோகக் கலவைகளிலிருந்தே தனியே பிரித்தெடுக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, வடஅமெரிக்கா, ஸ்பெயின், இங்கிலாந்து, பர்மா போன்ற நாடுகளில் அதிக அளவில் காரீயம் கிடைக்கிறது.

காரீயம் கலந்த 'காரீயடெட்ரா ஈதைல்’ எனும் திரவம் ஊர்திகளில் பெட்ரோலுடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஊர்திப் பொறியின் இடிக்கும் (Knocking) தன்மை குறைகிறது.

இவ்வாறு பெட்ரோல் (அ) டீசலில் கலக்கும் டெட்ரா ஈதைல் காரீயம் வாகனங்களை இயக்கும்பொழுது, காற்றில் கலந்து மாசுகளை அதிகப்படுத்துகிறது. இதனால் சுவாசிக்கும் காரீயத்தின் அளவு அதிகரிக்கிறது.இதன் காரணமாக இரத்தத்தில் காரீயம் கலந்து பக்கவாதம், கண்குருட்டுத்தன்மை, மன வளர்ச்சிக் குறைவு ஆகியவைகள் உண்டாகக் காரணமாகிறது. காரீயத்தால் செய்யப்பட்ட குழாய்களை குடி நீர்க் குழாய்களாகப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் காரீயமானது நீருடன் வினை புரிந்து காரீய ஹைடிராக்சைடு என்ற நச்சுத் தன்மை உடைய சேர்மத்தை உண்டாக்கும். இது உயிரினங்களை மெதுவாக கொல்லக் கூடிய மிகக் கொடிய நச்சுப் பொருளாகும்.