இளையர் அறிவியல் களஞ்சியம்/கால்சியம்

விக்கிமூலம் இலிருந்து

கால்சியம் : இது ஒருவகை தாதுப் பொருளாகும். இது தனியாகக் கிடைப்பதில்லை. பிற தாதுப்பொருட்களுடன் கலந்தே கிடைக்கிறது. மிக முக்கியத் தாதுப்பொருட்களான சுண்ணாம்புக்கல், சலவைக்கல், தாலமைட் போன்றவைகளில் மிகுதியான கால்சியம் உண்டு. கிளிஞ்சல், முத்து, முட்டை ஓடு, சங்கு பவளம் ஆகியவற்றில் கால்சியம் கார்பனேட் மிகுதியாக உள்ளது. எலும்பில் கால்சியம் பாஸ்பேட்டும் அதிகம் உள்ளது. கால்சியம் சல்பேட்டாக ஜிப்சம் எனும் தாதுப் படிவத்திலிருந்து பெறுகிறோம். இதிலிருந்துதான் கட்டுமாவாகப் பயன்படும் 'பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ்' பெறுகிறோம்.

வெண்மைநிறத் தாதுவான கால்சியம் திண்மையானதாகும். காற்றுடன் வினைபுரிந்து மாற்றமடையும். கால்சியத்தை நீருடன் கலக்கும்போது ஹைட்ரஜன் குமிழிகள் வெளிப்படும். கால்சியம் அதிகம் கலந்துள்ள நீர் கடினத் தன்மை பெறுவதால் சோப்பைப் பயன்படுத்தும்போது எளிதில் நுரை உண்டாவதில்லை.

கால்சியம் தாவர வளர்ச்சிக்கும் மிருகங்களின் வளர்ச்சிக்கும் இன்றியமையாத சத்துப்பொருளாகும். அதேபோன்று மனிதர்களுக்கும் கால்சியம் இன்றியமையாப் பொருளாக உள்ளது. நமக்கு வேண்டிய கால்சியத்தை காய்கறிகள், கீரைகள், பழங்கள், பால், நீர் ஆகியவற்றிலிருந்து பெற்றுக் கொள்கிறோம்.

மனிதனின் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத நுண்ணுாட்டச்சத்து கால்சியம் ஆகும். மேலும் கால்சியம் அயனிகள் மற்ற அயனிகள் திசுக்களுக்குள் சென்று வெளியேறுவதைக் கட்டுப்படுத்துகின்றன. எனவே கால்சியம் உப்புகள் இரத்த அழுத்தத்தைச் சீராக்க உதவுகின்றன.