இளையர் அறிவியல் களஞ்சியம்/கால்நடைகள்

விக்கிமூலம் இலிருந்து

கால்நடைகள் : நாம் விட்டுப் பிராணிகளாக வளர்க்கும் விலங்குகள் அனைத்துமே கால்நடைகளாகும். எனினும், ஆடு மாடுகள் மட்டுமே கால்நடை என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள ஆடுகளும் மாடுகளும் இடத்திற்கு இடம் வேறுபட்ட வகையினவாக உள்ளன. சிந்தி, பஞ்சாப் போன்ற பகுதிகளைச் சார்ந்த மாடுகள் சிறந்த இனங்களாகக் கருதப்படுகின்றன. இப்பகுதிகளைச் சார்ந்த பசுக்கள் மிகுதியாக பாலைத் தருகின்றன. கடுமையாக உழைக்கக்கூடியவைகளாகவும் உள்ளன. அதே போன்று ஓங்கோல் பசுக்களும் காங்கேயம் காளைகளும் சிறந்த இனமாகக் கருதப்படுகின்றன. மணப்பாறை மாடுகள் உழைப்புக்கேற்றவைகளாகும்.

காங்கேயக் காளை

உயர்ந்த ரகப் பசுக்களோடு சாதாரணவகைப் பசுக்களை இணையச் செய்து கலப்பின கால்நடைகள் உருவாக்கப்படுகின்றன. இவையும் அதிகம் உழைக்கத்தக்கனவாகவும் அதிகம் பால்தரத்தக்கவைகளாகவும் உள்ளன.

உலகிலேயே மிகுதியான கால்நடைகளைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இதற்கு இந்தியா ஒரு விவசாய நாடாக இருப்பது காரணமாகும்.

ஜெர்சி பசு

நாம் நமக்கு வேண்டிய பாலையும் வெண்ணெயையும் பசுக்கள், எருமைகள் மூலமே பெறுகிறோம். எருமைகள் பசுக்களைவிட அதிக அளவில் பாலும் வெண்ணெயும் தருகின்றன. டெல்லி எருமை உயர்தரமாகக் கருதப்படுகிறது.

காளை மாடுகள் உழவுக்கும் வண்டியிழுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இவைகள் இறைச்சிக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இதேபோன்று ஆடுகள் உரோமத்திற்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடுகளிடமிருந்து பாலும் கிடைக்கிறது. கால்நடைகளின் கழிவுகள் நல்ல உரங்களாக அமைகின்றன. கால்நடைகள் இறந்த பின்னர் அவற்றின் தோல்களும் கொம்புகளும் எலும்புகளும் கூட பல்வேறு வகைகளில் பயன்தரும் பொருட்களாக விளங்குகின்றன. தோல் தொழில் வளர்ச்சிக்கு கால்நடைகளே ஆதாரமாக அமைகின்றன. எனவே, நாட்டின் இன்றியமையாச் செல்வங்களாகக் கால்நடைகள் போற்றப்படுகின்றன. 'மாடு' என்ற தமிழ்ச்சொல் 'செல்வம்’ எனும் பொருளிலேயே வழங்கப்படுகின்றது.

நம்மைப் போலவே கால்நடைகளும் அடிக்கடி நோயால் பீடிக்கப்படுவதுண்டு. அவற்றிற்கு மருத்துவம் செய்வதற்கென தனி மருத்துவமனை உண்டு. அதுவே கால்நடை மருத்துவமனை, கால்நடை மருத்துவர்கள் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் கற்றுத் தேறியவர்கள். நோய்களைத் தீர்ப்பதற்கு மட்டுமின்றி நல்ல முறையில் கால்நடைகளைப் பராமரித்து வளர்ப்பதற்கான தனிப்பயிற்சியும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் அளிக்கப்படுகிறது.