இளையர் அறிவியல் களஞ்சியம்/காற்றழுத்திப் பம்பு

விக்கிமூலம் இலிருந்து

காற்றழுத்திப் பம்பு : கால் பந்தாட்டத்தின் போது அவற்றிற்குக் காற்றடிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அதேபோன்று சைக்கிளில் உள்ள சக்கர டியூபுக்கும் காற்றடிப்பதைப் பார்த்திருக்கிறோம். இவ்விரு காற்றடிப் பம்புகளும் அளவில் சிறிது வேறுபாடு கொண்டிருந்தாலும் இவற்றில் காற்றழுத்தும் முறை ஒன்றேயாகும்.

குழாய் வடிவில் இருக்கும் காற்றழுத்திப் பம்ப்பில் மேலும் கீழுமாகச் செல்லக்கூடிய இயங்கும் பிஸ்டன் இருக்கும். இது முன்னும் பின்னுமாகவும் இயங்கும். இதனுள் இருக்கும் பிஸ்டன் வால்வு வெளிக்காற்றை உள்ளே புக விடும். ஆனால் குழாயுனுள் சென்ற காற்றை வெளியே செல்ல விடாது. பிஸ்டனில் உள்ள வால்வு போன்றே குழாயின் அடியிலும் ஒரு வால்வு இருக்கும். அது குழாயில் உள்ள காற்றை எதனுள் செலுத்துகிறோமோ அதனுள் புகவிடும். ஆனால் அதே காற்றை மீண்டும் வந்த வழியே வெளிச்செல்ல விடாது.

அடிப்பாகத்தின் மூலம் காற்றைச் செலுத்தி விட்டு மீண்டும் பிஸ்டனை மேலே தூக்கினால் காற்றுக் குறைந்த குழாயின் உட்பகுதியை நோக்கி வெளிக்காற்று வால்வின் வழியே உட் சென்று நிரம்பும். மீண்டும் பிஸ்டனை கீழ் நோக்கி அழுத்தினால் குழாயில் உள்ள காற்று கீழேயுள்ள வால்வைத் திறந்துகொண்டு எதனுள் காற்றைச் செலுத்துகிறோமோ அதனுள் சென்று நிரம்பும்.

பெரிய அளவிலான காற்றழுத்திப் பம்ப்புகளும் உண்டு.