இளையர் அறிவியல் களஞ்சியம்/காளான்

விக்கிமூலம் இலிருந்து

காளான் : இது ஒருவகை தாவர இனமாகும். இவற்றில் நல்லவைகளும் கெட்டவைகளுமாக இலட்சத்திற்கு மேற்பட்ட வகைகள் இருப்பதாகக்

காளான் முளைத்தெழல்

கணக்கிட்டுள்ளார்கள். சிலவகைக் காளான்கள் உண்ணத்தக்கவை; சிலவகைக் காளான்கள் சத்துள்ளவை; மற்ற சில காளான்கள் நச்சுத்தன்மை உள்ளவை. உண்ணுவோருக்கு ஊறு செய்யக்கூடியவை. இவைகள் முட்டை அளவிலிருந்து கண்ணுக்குப் புலப்படா நுண்ணளவுவரை பலவகை வடிவங்களில் கிடைக்கின்றன. சாதாரணமாக நாய்க் குடைக் காளான்களை, முட்டை, சிப்பி வடிவக் காளான்களையும் நாம் பார்த்திருக்கலாம். கெட்டுபோன ரொட்டித் துண்டு காய்கறிகள் நாட்பட்ட உணவுப்பொருள்கள் இவற்றின் மீது பூஞ்சக்காளான் படர்ந்திருப்பதைப் பார்த்திருக்கலாம்.

சாதாரணமாக காளான் குழல்வடிவ மெல்லிய இழைகளால் உருவாகியிருக்கும். சிலவற்றில் குறுக்கு இழைகள் இருக்கும். தாவரங்கள் தங்களிடமுள்ள பச்சையத்தைக் கொண்டு சூரிய ஒளிச்சேர்க்கை மூலம் சத்தை உருவாக்கி வாழ்கின்றன. அத்தகைய பச்சையம் ஏதும் இல்லாத காளான்கள் 'ஒளிச்சேர்க்கை’ இல்லாமலே தங்களுக்கு வேண்டிய உணவைப் பெறக்கூடியவைகளாக உள்ளன. எனவே, இவை உணவிற்குப் பிற உயிர்களைச் சார்ந்திருக்க வேண்டியதாகிறது. எனவே, காளான் ஒட்டுண்ணியாகவும் சாருண்ணியாகவுமே உள்ளது.

மற்ற தாவரங்களைப்போல் இலை, பூ, காய் என்று எதுவுமே இதில் இல்லை. எனவே விதைத்துள் மூலம் மட்டுமே இது இன விருத்திசெய்து கொள்ள இயல்கிறது. இவைகளின் வளர்ச்சி எவ்வளவு விரைவாக ஏற்படுகிறதோ அவ்வளவு விரைவாக இவை அழியவும் நேர்கின்றது. மற்ற காய்கறிகளில் பெற முடியாத சத்தான வைட்டமின்'டி' (D) யை இதில் அதிகமாகவும் எளிதாகவும் பெற முடிகிறது. இதனால் உணவுக்கான காளான்கள் சுவையும் சத்து மிக்க சிறந்த உணவாகக் கொள்ளப் படுகின்றன.

பென்சிலின் மருந்து செய்ய நுண்ணியப் பூஞ்சக்காளான்களே மிகுதியும் பயன்படுகின்றன. சிலவகை மதுபானங்கள் தயாரிக்கவும் ரொட்டிகள் செய்யவும்கூட காளான்கள் பயன்படுகின்றன. மரங்கள் பட்டுப்போகவும் காய்கறிகள் அழுகிப் போகவும் கார மாயமையும் நச்சுக் காளான்களை அழிக்க 'காளான் கொல்லி’ எனும் வேதியியற் பொருள் பயன்படுத்தப்படுகின்றது.