இளையர் அறிவியல் களஞ்சியம்/குரல்வளை
குரல்வளை : நாம் ஓசை எழுப்புவதற்கு உறுதுணையாக அமைந்திருக்கும் உடல் உறுப்பு குரல்வளையாகும். இது தொண்டையின் அடிப்பகுதியில் அமைந்திருக்கிறது. நாம் உண்ணும் உணவு உணவுக் குழல் வ்ழியாக இரைப்பைக்குச் செல்கிறது. நாம் உள்ளிழுக்கும் காற்று குரல்வளை வழியாக சுவாசப்பைக்குச் செல்கிறது. அவ்வாறே வெளியிடும் காற்று குரல்வளை வழியாக மூக்கு, வாய் வழியாக வெளியேறுகிறது.
தொண்டையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள குரல்வளை முக்கோண வடிவினதாகும், இம்முக்கோணத்தின் முனையாக 'ஊட்டி’ அமைந்துள்ளது, இப்பகுதி சிலருக்குத் தொண்டைப்பகுதியில் வெளியே சற்று துருத்திக் கொண்டிருக்கும். இதனைச் ‘சங்கு' என்பாரும் உண்டு. -
ஒலி எழுப்ப வசதியாக குரல்வளையில் மெல்லிய தோலிலான இரு நாண்கள் உள்ளன. இவை 'குரல் நாண்கள்’ எனப்படும். சாதாரண நிலையில் இவை சுவாசக் குழாயுடன் துவாரப் பகுதியை கதவு போன்று மூடிக்கொண்டிருக்கும். நாம் பேசாத நிலையில் காற்றை உள்ளே இழுக்கும்போது இவை ‘ப’ வடிவில் விலகி வழிவிடும். ஆனால், நாம் பேசும்போது இக்குரல் நாண்கள் நெகிழ்ச்சியடைகின்றன. இதனால் குரல் வளையின் வாய் சிறியதாகிவிடும். நுரையீரலிலிருந்து வெளிப்படும் காற்று குரல்வளை நாண்களை அதிர்வடையச் செய்கின்றன. இந்த அதிர்வின் மூலமே ஒலி உண்டாகிறது. ஆனால், இவ்வொலி மெல்லியதாய் இருக்கும். இதைத் தொண்டை, மூக்கு, வாய் முதலிய உறுப்புக்களில் உள்ள காற்றால் பலப்படுத்தி காற்றில் பரவுகிறது.
குரல்வளை நாண்கள் பெண்களைவிட ஆண்களுக்குச் சற்று தடித்திருக்கும். இதனால் ஆண்கள் குரலொலியைவிட பெண் களின் குரல் ஒலி சற்று மென்மையாக இருக்கும். இதே போன்று சிறுவர்களுக்கும் இருக்கும். எனினும், குரல் ஒலியின் தன்மை வாய், மூக்கு ஆகியவற்றின் அமைப்பைப் பொறுத்தே அமைகிறது. மெல்லிய ஒலியை வாய் அசைப்பின் மூலம் உண்டாக்க முடியும். உரத்த குரலில் அதிக நேரம் பேச நேர்ந்தால் குரல் நாண்கள் பாதிப்படைகின்றன. இதனால் குரல் கம்மிவிடுகிறது. சளி போன்ற உபாதைகளாலும் குரல் பாதிக்கப்படும்.