இளையர் அறிவியல் களஞ்சியம்/குரோமியம்
குரோமியம் : இது பழுப்பு நிறமுள்ள தனிமம் ஆகும். இதை வேண்டிய அளவு மெருகேற்றலாமேயொழிய கம்பியாக நீட்டவோ, தகடாக அடித்து மாற்றவோ இயலாது. அந்த அளவுக்குக் கடினத்தன்மையுள்ள உலோகமாகும் இது. மற்ற உலோகங்களைவிட இலேசாக இருந்தபோதிலும் அலுமினியத்தைவிட இருமடங்கு எடையுள்ளதாகும்.
1897இல் எல். என். வாகுலின் என்னும் ஃபிரெஞ்சு வேதியல் வல்லுநர் குரோமியத்தை முதலில் கண்டறிந்தார். இதன் அணு எண் 24 ஆகும். குரோமியத்தின் உப்புக்கள் தோல் பதனிடும் தொழிலில் பெருமளவு பயன் படுத்தப்படுகிறது. அநேக மாறுபடும் இணைத் திறனும் உடையது. இதன் உப்பாகிய பொட்டாசியம் டைகுரோமேட் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகப் பயன்படுகிறது.
குரோமியம் தனி உலோகமாக இயற்கையில் கிடைப்பதில்லை. வேறு தனிமங்களுடன் சேர்ந்த கூட்டுக் கலவையாகவே கிடைக்கிறது. அப்போது குரோமியம் பல நிறங்களையுடையதாகக் காணப்படும். பின் வேதியியல் முறையில் குரோமியத்தைத் தனியே பிரித்தெடுப்பர். குரோமியம் துருப்பிடிக்காத உலோகமாகும்.
குரோமியம் பல்வேறு வகைகளில் பயன்பட்டு வருகிறது. பல்வேறு உலோகங்களின் மீது பூச்சுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் இப்பூச்சுள்ள உலோகப் பொருள் காற்றில் மங்குவதில்லை. எப்போதும் பார்க்கப் பளிச் சென்றிருக்கும். எனவே, உலோகப் பூச்சுத்தொழிலில் குரோமியம்இன்றியமையாப் பொருளாகப் பயன்பட்டு வருகிறது. எஃகுடன் சிறிதளவு கலந்தால் மேலும்கடினத் தன்மை பெற்றுவிடும். பளபளப்பு மிகுந்த 'எவர்சில்வர்’ எனும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தயாரிக்கப்படுகிறது.