இளையர் அறிவியல் களஞ்சியம்/கூட்டன்பர்க்
கூட்டன்பர்க் : இன்று அழகான வடிவில் அச்செழுத்துக்களை வார்த்து அச்சிட்டுப் படித்து மகிழ்கிறோம். இத்தகைய அச்செழுத்துக்களை உருவாக்கும் முறையை முதன் முதலாகக் கண்டுபிடித்தவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கூட்டன்பர்க் என்பவராவார்.
இவர் ஜெர்மன் நாட்டிலுள்ள மாரண்ட்ஸ் எனுமிடத்தில் 1400ஆம் ஆண்டில் பிறந்தார். சில தவிர்க்க முடியாத அரசியல் காரணங்களால் இவரும் இவரது தாயாரும் 1420ஆம் ஆண்டில் சொத்து சுகங்களை இழந்து பல்வேறு நாடுகளில் அலைய வேண்டியதாயிற்று. ஜெர்மனியில் உள்ள ஸ்டிராயர்க் என்ற இடத்தில் தங்கியிருந்தபோதுதான் 1489ஆம் ஆண்டில் முதன்முதலாக அச்செழுத்துக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடலானார், சிறிய மரத்துண்டுகளில் எழுத்துக்கள் தலைகீழாக இருக்குமாறு செதுக்கி அவற்றினிடையே துளையிட்டுக் கயிற்றில் கோர்த்தார். பின்னர் அவற்றை மையில் தோய்த்து தோல் பொருளின் மேல் வைத்து அழுத்தினார். நேர் வடிவில் அச்செழுத்துக்கள் பதிந்தன. இதுவே
அச்செழுத்தின் துவக்கமாகும். அதன்பின் தொடர்ந்து முயன்று, தொடர்ந்து அச்செழுத்துக்களைக் கொண்டு அச்சிடும் முறையை ஆய்ந்து கண்டறிந்தார். தன் நண்பர் ஜோகன் பஸ்ட் என்பாருடன் இணைந்து அச்சிடும் எந்திரம் ஒன்றையும் வடிவமைத்தார். அதன் துணைகொண்டு 'மாசிரின் பைபிள்’ என்ற நூலை முதன் முதலாக இவ்வெந்திரத்தைக் கொண்டு அச்சிட்டனர்.