இளையர் அறிவியல் களஞ்சியம்/கெப்ளர்

விக்கிமூலம் இலிருந்து

கெப்ளர் : இவர் புகழ்பெற்ற ஜெர்மன் நாட்டு வான ஆராய்ச்சியாளர் ஆவார். இவரது முழுப்பெயர் ஜோஹன்னஸ் கெப்ளர் என்ப தாகும்,

இன்று வேகமாக வளர்ந்துவந்துள்ள வானவியல் ஆராய்ச்சிக்கு அழுத்தமான அடிப்படையை அமைத்துத் தந்தவர் இவரே. தம்மால் எவ்வாறு பார்க்க முடிகிறது என்பதைக் காரண காரியத்தோடு விளக்கிய பெருமை இவரையே சாரும். தொலைநோக்கியைக் கொண்டு வெகுதொலைவுக்கு அப்பால் உள்ளவற்றைக் காணமுடியும் என்பதை செயல்பூர்வமாக எண்பித்தவரும் இவரே. நிலவுக் காலங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்படுவதற்கும் மாபெரும் அலைகள் தோன்றுவதற்கும் நிலவே காரணம் என்பதைக் கண்டறிந்து கூறியவர்.

நியூட்டன் போன்றவர்களின் ஆராய்ச்சிக்கு வழிகாட்டியாக விளங்கிய கெப்ளர் 1571ஆம் ஆண்டு தென்மேற்கு ஜெர்மனியில் வெய்ல் எனுமிடத்தில் பிறந்தார். இவர் மூன்று வயதுச் சிறுவராக இருந்தபோது கடுமையான அம்மை நோயால் தாக்கப்பட்டார். இந்நோயின் கடுமை இவரது கையையும் கண்ணையும் பெரிதும் பாதித்தது. கையை ஊனமாக்கியது போன்றே கண்ணையும் ஒளிகுன்றச் செய்தது.

இதனால் சிறிதும் மனந்தளராத கெப்ளர் படிப்பதிலும் ஆய்வுணர்வோடு சிந்திப்பதிலும் பேரார்வம் காட்டினார். டுபிங்கன் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது இவரது படிப்புத் திறமை கண்டு ஆசிரியர்கள் வியந்தனர். விரைவிலேயே இவர் வானவியலில் வல்லுநர் எனும் சிறப்புக்குரியவரானார்.

அதே சமயத்தில் நிலத்தின் இயக்கம்பற்றி ஆய்ந்துவந்த போலந்து நாட்டு வானவியல் நிபுணர் கோப்பர்னிக்கஸ் தன் கண்டுபிடிப்புகளைப் பற்றிப் பத்திரிகைகளில் ஆய்வுக்

கெப்ளர்

கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். அக் கட்டுரைகளைப் படித்து வந்த கெப்ளர் மிகவும் மகிழ்ந்தார். பூமியின் இயக்கம்பற்றிய கோப்பர்நிக்கசின் கண்டுபிடிப்புகள் முழுக்க முழுக்க உண்மை என்பதை எடுத்துக் கூறி நிலை நிறுத்தினார்

ஆஸ்திரியா நாட்டிலுள்ள கிரேன் பல்கலைக்கழகத்தில் 1594ஆம் ஆண்டில் கணிதவியல் பேராசிரியர் ஆனார். ஏழாண்டுகளுக்குப் பின் பிரேக் நகரிலுள்ள வானாராய்ச்சிக் கூடத்தின் கணிதவியல் வல்லுநர் பணியை மேற்கொண்டார். இங்கு இவர் தனது வானவியல் ஆராய்ச்சிகளை முனைப்புடன் மேற்கொள்ளலானார்

ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப்பின் தன் புகழ் பெற்ற மூன்று கோளியக்க விதிகளைக் கண்டறிந்து அறிவித்தார். இவை 'கெப்ளர் விதிகள்’ என அழைக்கப்படலாயிற்று. அவை (1) கதிரவன் நீண்ட வளையங்கள் வழியே சுற்றுகின்றது. (2)அவ்வளையங்களில் சுற்றும்போது எந்தெந்த இடங்களில் எவ்வளவு வேகத்துடன் சுற்றுகின்றது. (3) இந்நீண்ட வளையத்தைச் சுற்ற எவ்வளவு காலத்தைக் கதிரவன் எடுத்துக்கொள்கிறது என்பதே அம்மூன்று விதிகள்.

இந்தக் கெப்ளர் விதிகளின் அடிப்படையில்தான் பின்னர் நியூட்டன் தன் புவியீர்ப்புக் கொள்கையை வகுத்தார்.