இளையர் அறிவியல் களஞ்சியம்/கேபிள்
கேபிள் : மின்காந்தத்தைக் கடத்தவல்ல கம்பிகளின் தொகுதி காப்பிட்டுள்ள உறையினுள் கம்பிவடமாக அமைந்திருப்பது 'கேபிள்’ என அழைக்கப்படுகிறது. மின்சாரத்தையும் தந்திச் செய்திகளையும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்பப் பெரிதும் கேபிள் பயன்படுத்தப்படுகிறது. கேபிளில் உள்ள கம்பிகள் ஒன்றாக இணைத்து முறுக்கப்பட்டிருக்கும்.
தரையின்மீது கேபிள்கள் பயன்படுத்தப்படுவதுபோன்றே கடலுக்கடியிலும் செய்திகள் அனுப்ப கேபிள்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.
ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செய்தியனுப்பும் தந்தி முறை 1844இல் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. நிலத்தின்மீது கம்பங்களை நட்டு அதன்மூலம் செல்லும் தந்திக் கம்பிகள் வழியே ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரங்களுக்குத் தந்திகள் அனுப்பப்பட்டன. இதன் மூலம்தரை வழிச்செய்திகள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்பட்டன. கடலுக்கு அப்பால் செய்தி அனுப்ப இயலாத நிலை. இந்நிலையை மாற்ற மேன்மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாகக் காப்பிட்ட கம்பிவடங்களைக் கடலுக்கடியில் போட்டு செய்தி அனுப்பும் முறை செயல்பாட்டிற்கு வந்தது. 1866ஆம் ஆண்டில் ஃபீல்டு எனும் அமெரிக்கரும் சர் சார்லஸ் பிரைட், லார்டு கெல்வின் என்ற இரு ஆங்கிலேயர்களும் இணைந்து முதன் முதலாக அயர்லாந்துக்கும் நியூபெளண்டலாந்துக்குமிடையே கேபிள் அமைத்துச் செய்தி அனுப்பும் முறையைத் தொடங்கினர். 1902 -ஆம் ஆண்டில் பசிபிக் பெருங்கடலிலும் 1955 -ஆம் ஆண்டில் அட்லாண்டிக் பெருங்கடலிலும் கேபிள்கள் போடப்பட்டு செய்திகள் அனுப்பப்பட்டன.
ஆரம்ப காலத்தில் கடலுக்கடியில் போடப்பட்ட கேபிள்கள் முறுக்கிய கம்பி வடங்களாகும். இவை கடலுக்கடியில் உள்ள மண்ணாலோ கடல் நீரின் உப்புத் தன்மையினாலோ பாதிக்கப்படா வண்ணம் கேபிள் கம்பிகள் உருவாக்கப்பட்டன. இக்கம்பி வடங்கள் கடல்வாழ் உயிரினங்களால் சேதமுறா வண்ணம் கெட்டி மேலுறையோடு அமைக்கப்பட்டன. அவற்றின்மீது மேல்பூச்சுகளும் பூசப்பட்டு அமைக்கப்பட்டன.
இன்று பயன்படுத்தப்படும் கடலடிக் கேபிள்கள் பொது அச்சு (Coaxial) கேபிள்கள் என அழைக்கப்படுகின்றன. இதில் நடுவே ஒரு காப்பிட்ட கம்பி உண்டு. அதைச் சுற்றிலும் மின் கடத்தும் தன்மை கொண்ட உலோகக் குழல் இருக்கும். அதன்மேல் பாதுகாப்பு உறை அமைக்கப்பட்டிருக்கும். இக்கேபிள்கள் வழியே தொலைக்காட்சி, வானொலிக்கான மின்னோட்டங்கள் அனுப்பப்படுகின்றன.
இன்று உலகெங்கும் உள்ள கடல்களுக்கு அடியில் கேபிள்கள் போடப்பட்டுள்ளன. இவ்வாறு உலகைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கேபிள்களின் மொத்த நீளம் சுமார் ஏழு இலட்சம் கிலோ மீட்டர்களாகும். இதன்மூலம் உலகின் அனைத்துப் பகுதி மக்களோடும் நேரடித் தொடர்பு கொள்ளமுடியும். அனுப்பும் செய்தி சிதையாமல் சேரும் பொருட்டு ஐம்பது கிலோ மீட்டருக்கு ஒன்றாக குரல் பெருக்கிச் சாதனம் (Repeater) அமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு அதிர்வெண் வழியாக சுமார் 75க்கு மேற்பட்ட செய்திகளை ஒரே சமயத்தில் கேபிள்மூலம் அனுப்ப இயலும்.