உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/கொக்கிப் புழு

விக்கிமூலம் இலிருந்து

கொக்கிப் புழு : மனிதருக்கு பெருந்தீங்கிழைக்கும் புழுக்களில் 'கொக்கிப் புழு' (Hook worm) மிக முக்கியமானதாகும். இப் புழு தன் வாயிலுள்ள கொக்கி வடிவிலான பற்களால் எளிதாகக் குடலின் உட்சுவரைக் கடித்துக் கொண்டிருப்பதால் இவை கொக்கிப் புழுக்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. ஆண் புழுவைக் காட்டிலும் பெண்புழு தடித்தும் நீண்டுமிருக்கும்.

மனிதனுக்கும் பிற பிராணிகளுக்கும் தாவரங்களுக்கும் தீங்கு செய்யும் பலவிதப் புழுக்கள் தரையிலும் நீரிலும் உள்ளன. அவை நூற்புழு, நாக்குப்பூச்சி, உருண்டைப் புழு என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன. இவற்றுள் மனித உடலில் மட்டும் சுமார் ஐம்பது வகையான புழுக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றிலெல்லாம் மிகப் பெரும் தீங்கை உண்டு பண்ணுபவை கொக்கிப் புழுக்களும் அவற்றைச் சார்ந்த இனப் புழுக்களுமேயாகும்.

கொக்கிப் புழுக்கள் எளிதாக மனிதனைத் தொற்றுகின்றன. இப்புழுவின் முட்டைகள் மலத்தோடு கலந்து வெளிவருகின்றன. தரையீரத்தில் இவை ஓரிரு நாட்களில் குஞ்சு பொறிக்கின்றன. லார்வா எனப்படும் புழுக்குஞ்சு மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை உயிரோடிருக்கும். அவை மனித உடலைத் தொட்டவுடன் தோலைக் குடைந்து கொண்டு உடலினுட் செல்கின்றன. அதன்பின் இரத்த ஓட்டத்தின்மூலம் வலப்பக்க இதயத்தை அடைகின்றன. அங்கிருந்து சுவாசப்பைக்குப் போய் பின் உணவுக் குழல் வழியாக எளிதாக இரைப்பைக்குள் இறங்குகின்றன. பின் அங்கிருந்து நகர்ந்து எளிதாக முன் சிறுகுடல், பின் சிறுகுடலில் சென்று தங்குகின்றன. அங்கு இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து வளர்கின்றன. வளர்ந்த ஆண்-பெண் புழுக்கள் சேர்ந்து முட்டையிடத் தொடங்குகின்றன. ஒரு நாளைக்கு ஒரு பெண் புழு 25,000 முதல் 85,000 முட்டைகள் இடும். சாதாரணமாக கொக்கிப் புழுக்களின் ஆயுட் காலம் 5 அல்லது 6 ஆண்டு காலமாகும்.

குடலிலேயே குடியிருந்து கொண்டு இரத்தத்தை உறிஞ்சுவதன்மூலம் நாம் பெற வேண்டிய உயிர்ச்சத்தையும் உறிஞ்சி விடுகின்றன . இதன்மூலம் சத்து இழப்பு ஏற்படுகிறது. உழைக்கும் திறன் குன்றுகிறது, மனத்தளர்வு உண்டாகிறது. மந்த நிலை உருவாகிறது. இதன் விளைவாக இரத்தச் சோகை போன்ற நோய்கள் ஏற்பட ஏதுவாகிறது. கொக்கிப் புழுக்கள் இரத்தத்தை உறிஞ்சி வழிந்தோடச் செய்கின்றன. கொக்கிப் புழுக்கள் இடம் மாறிச் சென்றபோதிலும் முந்தைய இடத்தில் இரத்தம் வழிந்து கொண்டே இருக்கும். இதனால் இரத்தப் போக்குகளால் உடலுக்கு வேண்டிய இரத்தம் குறைகிறது. உடல்வலிமை இழக்கிறது. இதனால் இதயத்துடிப்பு அதிகரிக்க கண்கள் வெளுத்து சோகை நோய் உண்டாகிறது.

கொக்கிப்புழு

விழிப்புடனிருந்தால் கொக்கிப் புழுக்கள் நம்மைப் பிடிக்காவண்ணம் காத்துக்கொள்வது எளிதாகும். கண்ட கண்ட இடங்களில் மலங்கழிக்கக் கூடாது. அவ்வாறு மலங்கழித்தபின் குளங்குட்டைகளில் கால் அலம்பக்கூடாது. இத்தகைய இடங்களில்தான் கொக்கிப்புழுக்குஞ்சுகளான 'லார்வா' செழித்து வளரும். அப்படியே மலங்கழிக்க நேரின் மலங்கழித்தவுடன் அதன்மீது மண்ணைப் போட்டு மூடி விடவேண்டும். காலணி இன்றி நடக்கக் கூடாது. இதனால் கொக்கிப் புழுக்குஞ்சுகள் உடலில் தொற்ற வழியில்லாமல் போய்விடும். சுகாதாரத்தை உரிய வழிகளில் பேணாமையால் இந்தியாவில் 100-க்கு 80 பேர்கள் கொக்கிப் புழுத் தொல்லைக்கு ஆளாகிறார்கள்.