இளையர் அறிவியல் களஞ்சியம்/சாயம்

விக்கிமூலம் இலிருந்து

சாயம் : பல்வேறு இழைகளுக்கு வண்ணமூட்டும் பொருட்கள் பொதுவாக சாயங்கள் என அழைக்கப்படுகின்றன. ஒரு சாயப் பொருளுக்கு மூன்று முக்கிய குணங்கள் இருக்க வேண்டும்.

(1) தகுந்த நிறத்தை பெற்றிருக்க வேண்டும். (2) கரைசலில் இருந்து பொருளின் மேல் சேர்ந்திருக்கும் பொருளின் பண்பினைப் பெற்றிருக்கவேண்டும். (8) நீர், அமிலங்கள் மற்றும் காரங்களுடன் வினைபுரியும் தன்மை இருக்கக்கூடாது.

பொதுவாக, செயற்கையாக நிறம் தரும் சாயப்பொருட்களில் நிறத்தைத் தரும் தொகுதிகள் குரோமோபோர் (Chromophere) என்று அழைக்கப்படுகின்றன. எனவே நிறத்தைத் தரும் தொகுதியை பெற்றிருக்கும் சேர்மங்கள் குரோமோஜன்கள் (Chromogens) என்று அழைக்கப்படுகின்றன. குரோமோஜன்களில் காணும் குரோமோபோர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க நிறத்தின் அடர்த்தி அதிகரிக்கும். இவ்வாறு நிறத்தின் அடர்த்தியை அதிகரிக்கும் தொகுதிகள் ஆக்ஸோ குரோம்கள் (auxochromes) என அழைக்கப்படுகின்றன. துணிமணிகளுக்கோ பிறபொருட்களுக்கோ சாயமேற்றிப் பயன்படுத்தும் வழக்கம் பண்டுதொட்டே இருந்து வந்துள்ளது. பொருட்களுக்கு அழகூட்டி, வெயில், காற்று, பனி முதலானவைகளிலிருந்து ஓரளவு காப்பு தருவதாகச் சாயம் அமைந்துள்ளது. முற்காலத்தில் தாவரங்களிலிருந்தும் பூக்களிலிருந்தும் பழங்கள், மரப்பட்டைகள், இவைகளிலிருந்தும் சாயம் தயாரித்து வந்தனர். அவுரி எனும் தாவரம் நீலச்சாயம் தயாரிக்கப் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தது. செயற்கைச் சாயப் பொருட்கள் கண்டுபிடிக்கப்படும்வரை இது வெளிநாடுகளுக்கு இந்தியாவிலிருந்து பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

இந்நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து செயற்கைச் சாயங்கள் வேதியியல் முறையில் தயாரிக்கப்பட்டன. இதனைத் தொடங்கி வைத்த நாடு ஜெர்மனியாகும். இன்று உலகிலுள்ள எல்லா நாடுகளுமே செயற்கைச் சாயங்களை வேண்டிய வண்ணத்தில் விரும்பும் அளவுக்கு உற்பத்தி செய்ய முடிகிறது. இச்சாயங்கள் இன்று துணி, தோல், தாள், பிலிம், மருந்து போன்றவற்றிற்கு மட்டுமல்லாது உணவுப் பொருட்களிலும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இயற்கையாகக் கிடைத்து வந்த சாயங்களை விட செயற்கைச் சாயத்தை எளிதாகத் தயாரிக்க முடிகிறது. தயாரிப்புச் செலவு மிகவும் குறைவு; விரும்பும் வண்ணத்தை எளிதில் பெற இயலுகிறது. இதனால் இயற்கைச் சாயம் தயாரிப்புத்தொழில் மறைய செயற்கைச் சாயத் தயாரிப்புத் தொழில் செழுமையடைந்துள்ளது.