இளையர் அறிவியல் களஞ்சியம்/சார்புக் கொள்கை

விக்கிமூலம் இலிருந்து

சார்புக் கொள்கை : உலகப் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்ததே ‘சார்புக் கொள்கை' (Theory of Relativity) என்பதாகும். ஒரு பொருளின் எடைக்கும், அப்பொருளிலிருந்து பெறப்படும் சக்திக்கும் உள்ள தொடர்பை விளக்குவதே சார்புக் கொள்கையர்கும். இதை 1916ஆம் ஆண்டில் கண்டறிந்து கூறினார். இந்தப் புதிய கொள்கையை இவர் வெளியிட்டபோது இதை நன்கு புரிந்து விளக்கும் ஆற்றல் படைத்தவர்கள் பத்துப் பன்னிரண்டு பேரே உலக முழுவதிலும் இருந்தனர். அந்த அளவுக்குப் புரிந்துகொள்ள கடினமான கோட்பாடாகும் சார்புக் கொள்கை, இக் கண்டுபிடிப்புக்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இயக்கங்கள் அனைத்துமே "சார்புத் தன்மை"யுடையவை என்பதை ஒவ்வொருவரும் தம் அனுபவத்தின் வாயிலாக அறிய முடியும். உதாரணமாக “நீங்கள் ஓரிடத்தில் நின்று கொண்டிருக்கும்போது ஓர் இரயில் உங்களைத் தாண்டிக் கொண்டு மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் ஓடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இரயிலில் செல்லும் ஓர் ஆள் இரயில் போகும் திசையில் ஒரு பந்தை மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் செல்லும்படியாக வீசி எறிகிறார் என்றால், இரயிலில் போகும் அந்த ஆளுக்கு அப்பந்து இரயிலை விட்டு வெளிச் செல்லும் வேகம் மணிக்கு 20 கி.மீ. எனத் தோன்றும். ஆனால், உங்களுக்கு இரயிலின் வேகமும்

ஆல்பர்ட் ஐன்ஸ்டின்

பந்தின் வேகமும் சேர்ந்து மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் பந்து உங்களைத் தாண்டிச் செல்வதாகத் தோன்றும். ஆகவே பந்தின் வேகம் என்று தனித்து ஒன்றும் இல்லை. அதைப் பார்ப்பவரைப் பொறுத்து அதன் வேகத்தைக் கூறவேண்டியிருக்கிறது. வேகத்தின் அளவு வேறொன்றைச் சார்ந்த வகையில் கணக்கிடப் பட வேண்டியுள்ளது. இதுவே "சார்புக் கொள்கை" எனப்படுகிறது.

எனவே, இயக்கம் முழுவதும் ஏதோ ஒன்றோடு தொடர்புடையதாக - சார்புள்ளதாக அமைந்துள்ளது என்பதே ஐன்ஸ்டின் கொள்கையின் அடிப்படையாகும்.