இளையர் அறிவியல் களஞ்சியம்/சிமென்ட்
சிமென்ட் : கட்டிடம் போன்ற கட்டுமானங்களை உருவாக்கத் தேவைப்படும் இன்றியமை யாப் பொருட்களில் சிமென்ட்டும் ஒன்றாகும். இதைச் 'சிமிட்டி' என்றும் அழைப்பர்.
பன்னெடுங் காலத்திற்கு முன்பிருந்தே சிமிட்டி போன்ற பொருளைக் கொண்டு மாபெரும் கோட்டை கொத்தளங்களையும் கோயில்களையும் கட்டி வந்தனர் என்பது வரலாறு. அக்காலத்தில் எகிப்தியரும் ரோமரும் இவ்வகை உறுதிமிக்க சிமிட்டித் தயாரிப்பில் சிறந்து விளங்கினர் என்பதற்கு இன்றுவரை அழியாமல் அந்நாடுகளில் நிலைபெற்றிருக்கும் பழங்கட்டிடங்களே சான்றாகும். ஏனோ இவ்வகை சிமிட்டித் தயாரிப்பு முறை பின்வந்த மக்களுக்குத் தெரியாமல் போய்விட்டது.
மீண்டும் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் இன்றுள்ள சிமென்ட் தயாரிக்கும் முறை கண்டறியப்பட்டு செயல் பாட்டிற்கு வந்தது. கட்டிடக்கலையின் பேரங்கமாகவும் சிமென்ட் அமைந்துள்ளது.
சிமென்ட் செய்வதற்கான மூலப்பொருளாக அமைந்திருப்பது சுண்ணாம்புக்கல்லாகும். இதை வெட்டி எடுத்து சிறுசிறு துண்டுகளாக உடைப்பர். பின் அதனுடன் களிமண்ணையும் நீரையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலப்பர். பின் அக்கலவையை எந்திரத்தினுள் செலுத்தி நன்கு குழைத்து சேறு போல் ஆக்குவர். இதை மீண்டும் ஒரு சூளை எந்திரத்தினுள் செலுத்தி நன்கு சூடேற்றுவர். சாய்வாக அமைந்துள்ள சுழல் குழல்கள் வழியாக மெதுவாக இறங்கும் சேறு மீது வெப்பக்காற்று செலுத்தப்படும். சுமார் 1400 வெப்பத்தில் இச்சேறு பல்வேறு வேதியியல் மாற்றங்களை அடைந்து பச்சை நிறமாகவோ அன்றி கரும் பச்சையாகவோ வெளிப்படும். இதை குளிர வைத்து, பின் அதனுடன் சிறிதளவு ஜிப்சம் எனும் கனிமத்தைச் சேர்த்து அரைத்து நுண் தூளாக்குவர். மாவாக வெளிவரும் இதுவே சிமென்ட் ஆகும்.
சிமென்ட்டுடன் குறிப்பிட்ட அளவு மணலும் நீரும் கலந்து பிசைந்து செங்கற்களுடன் சேர்த்துப் பயன்படுத்திக் கட்டிடம் கட்டுவர். சிமென்ட் கலவையைக் கொண்டு பூச்சு வேலைக்குப் பயன்படுத்துவர். சிமென்ட், மணல், ஜல்லி ஆகிய மூன்றையும் குறிப்பிட்ட அளவுகளில் கலந்து கான்கிரீட் தயாரிப்பர். வேண்டிய வடிவில் பின்னப்பட்ட கம்பிகளின் மீது காங்கிரீட்டைக் கொட்டி கெட்டிப் பாளங்களும் தூண்களும் கட்டிட மேற்கூரைகளும் உருவாக்குவர்.