இளையர் அறிவியல் களஞ்சியம்/சிலிக்கன்
சிலிக்கன் : 1828இல் பெர்சிலிஸியஸ் (Berzelius) படிகமற்ற தனிமமாகவும், 1854 -இல் டெவில்லி (Deville) என்பார்படிக தனிமமாகவும் பிரித்தெடுத்தனர். இத்தனிமம் ஆக்சிஜனோடு அதிக கவர்ச்சி உடையதால், இது பெரும்பாலும் அதன் ஆக்சைடாகவே (Silicon dioxide) கிடைக்கிறது. இந்த சிலகன டை ஆக்சைடு உலோக ஆக்சைடுகளுடன் சேர்ந்து உலோக சிலிகேட்டுகளாக, பாறைகளாகவும், களிமண் மற்றும் விலைமதிக்க முடியாத கற்களாகவும் காணப்படுகிறது. படிக சிலிக்கன் குவார்ட்ஸ் (Quarts), டிரிடைனைட் (Tridynite) மற்றும் கிறிஸ்டோபலைட் (Gristobalite) என்னும் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகிறது. இது உலகில் மிக அதிகமாகக் கிடைக்கும் அலோகத் தனிமம் ஆகும். இது இயற்கையில் தனியாக கிடைப்பதில்லை. வேறு தனிமங்களுடன் கலந்தே கிடைக்கிறது. இது தாவர உறுப்புகளிலும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
சாதாரணமாக 'குவார்ட்ஸ் எனப்படும் படிகக் கல்லிலும் மணலிலும் சிலிக்கா எனும் சிலிக்கன்-டையாக்சைடு இருக்கிறது. படிகக் கல்லை கரியுடன் சேர்த்து மின்னுலையில் உருக்கி சிலிக்கன் படிகத்தைப் பெறலாம். படிக வடிவிலான இச்சிலிக்கனை வெப்பமூட்டினால் 16930K வெப்பத்தில் உருகுநிலையை அடையும். அப்போது கார்பனைப்போல் எரிந்து சிலிக்காவாக மாற்றம் பெறும். சிலிக்கனையும் கார்பனையும் கலந்து சாணைக்கல் உருவாக்கப்படுகிறது. சிலிக்கனோடு கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகியவற்றைச் சேர்த்து சிலிக்கோன்கள் எனும் சேர்ம வகை பெறப்படுகிறது. கரிமத்தன்மை கொண்ட இச் சேர்மம் கண்ணாடியைப் போல் உடையாமலும் பிளாஸ்டிக்கைப்போல் எளிதில் உருகு நிலை பெறாமலும் உறுதியுடன் கூடிய நெகிழ்ச்சி பெறுகிறது. இரும்பாலான பொருட்கள் மீது பாதுகாப்புக்கான பூச்சாக இச் சேர்மம் பூசப்படுகிறது. மின் தொழிலில் இது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சுத்தப்படுத்தப்பட்ட சிலிக்கன் குறை மின் கடத்தியாக கையடக்க வானொலிப் பெட்டிகளில் (டிரான்சிஸ்டர்) அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.