உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/சிறுகுடல்

விக்கிமூலம் இலிருந்து

சிறுகுடல் : நாம் உண்ணும் உணவு செரிமானமாகும் உணவுப் பாதையில் சிறுகுடல் மிக முக்கிய பகுதியாகும். இது குடல்வால் பகுதி தொடங்கி பெருங்குடல்வரை நீண்டிருக்கும். இதன் நீளம் சுமார் 3½ மீட்டர் இருக்கும். இது வயிற்றுடன் நடுப்பகுதியின் அடியில் உள்ளது. இதைச் சூழ்ந்து பெருங்குடல் அமைந்துள்ளது. சிறுகுடலை மூன்று பகுதிகளாகப் பிரிப்பர். அவை, முன்சிறுகுடல், இடைச் சிறுகுடல், கீழ்ச் சிறுகுடல் என்ற பிரிவுகளாகும்.

குடற்பகுதிகள்

இதில் முன் சிறுகுடலின் நீளம் சுமார் 25 செ.மீ. இருக்கும். அதன் விட்டம் சுமார் 5 செ.மீ. இருக்கும். சிறு குடலில் மிகக் கனமான பகுதியாக அமைந்திருப்பது இப்பகுதியேயாகும். அமைப்பில் பார்ப்பதற்கு ஒரு லாடம் போல் வளைந்திருக்கும். இந்த வளைவினுள் தான் கணையம் என்ற பகுதி அமைந்துள்ளது. இதிலிருந்துதான் கணையநீர் சுரக்கிறது. பித்த நீரும் கணைய நீரும் இதன் நடுப்பகுதியில் வந்து ஒன்று சேர்கின்றன.

இடைச் சிறுகுடல் முன் சிறுகுடலைவிட நீளம் மிகுந்ததாகவும் விட்டம் குறைந்ததாகவும் இருக்கும். இதன் மொத்த நீளம் சுமார் 24 மீட்டர் இருக்கும். அதன் விட்டம் 4 செ.மீ. இருக்கும். இது சுருண்டு இருப்பதோடு சுருங்கியதாகவும் இருக்கும். கீழ்ச் சிறுகுடல் சுமார் நான்கு மீட்டர் நீளமிருக்கும். அதன் விட்டம் சுமார் நான்கு செ.மீ. ஆகும். இது இடைச் சிறுகுடலைவிட மிக அதிகமாக சுருங்கியும் சுருண்டுமிருக்கும். சிறுகுடல் பெருங்குடலின் ஒரு பகுதியோடு இணைகிறது. அவ்வாறு அவை இரண்டும் சேர்ந்திணையும் இடத்தில் ஒரு வால்வு உண்டு.

உண்ணும் உணவு சீரணமாவது வாயிலும் இரைப்பயிலும் தொடங்கி சிறுகுடலில் முடிகிறது. இதற்குப் பேருதவியாக அமைவன சிறு குடல் சுவர்கள் சுரக்கும் என்ஸைம்களும் சிறுகுடலுக்குள் வந்து சேரும் கணைய நீரும் பித்த நீருமாகும். சிறுகுடலானது சீரணப் பணியை முற்றுப்பெற செய்வதோடு சீரணித்த உணவுச் சத்தை உறிஞ்சவும் செய்கிறது. சிறு குடல் சுவர்களெங்கும் நுண் விரல்கள் போல் நீட்டிக்கொண்டிருக்கும் குடல் உறிஞ்சி உறுப்புகள் சீரணமான உணவின் ஒரு பகுதியை தந்துகிகளுக்குள் உறிஞ்சுகின்றன. இவ்வாறு உறிஞ்சியதுபோக எஞ்சியுள்ள உணவு சத்து உறிஞ்சிகளின் பாற்குழல்களுள் செல்லும். அவை இவ்வுணவுச் சத்தை இரத்த ஓட்டத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும். இவ்வாறு சிறுகுடல் சீரணப் பணியைச் செவ்வனே நிறைவேற்றும் சிறப்பு உறுப்பாக அமைந்துள்ளது.