இளையர் அறிவியல் களஞ்சியம்/சிறுநீர் மண்டலம்

விக்கிமூலம் இலிருந்து

சிறுநீர் மண்டலம் : நம் உடலில் மிக இன்றியமையா உறுப்பாக அமைந்திருப்பது சிறுநீரகம் ஆகும். சிறுநீர் உருவாவது முதல் வெளியேறும் வரையிலான பல்வேறு பணிகளைச் செய்து முடிக்கும் உறுப்புகளைக் கொண்ட பகுதி ‘சிறுநீர் மண்டலம்’ என்று அழைக்கப்படும். இதில் இரண்டு சிறுநீரகங்கள், சிறுநீர்க் குழாய், சிறு நீர்ப் பை, சிறுநீரை வெளியேற்றும் குழாய் ஆகிய அனைத்தும் அடங்கும்.

நம் உடலில் இரு சிறுநீரகங்கள் உள்ளன. அரிதாக ஓரிருவருக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே அமைந்திருத்தலும் உண்டு. ஒரு மனிதன் உயிர் வாழ ஒரு சிறுநீரகம் போதும், எனவே தான், யாருக்காவது சிறுநீரகம் இரண்டும் கெட்டுவிட்டால் இரண்டு சிறுநீரகம் உள்ளவர் ஒன்றை அறுவை மருத்துவம் மூலம் கொடுத்து உதவலாம். ஒரு சிறுநீரகத்துடன் இருவரும் உயிர்வாழ முடியும்.

சிறுநீரகங்கள் முதுகெலும்பின் அடிப்புறத்தில் இடுப்புப் பகுதியில் மொச்சை வடிவில் பக்-கத்திற்கு ஒன்றாக இருபுறமும் அமைந்துள்ளன. இவை சுமார் 10 செ.மீ. நீளமும் 6 செ.மீ. அகலமும் 3½ செ.மீ. கனமும் உள்ளவைகளாகும்.

ஒவ்வொரு சிறுநீரகமும் ஆயிரக்கணக்காண நுண் குழாய்களுடன் அமைந்துள்ளது. இந் நுண்குழாய்களை மெல்லிய இரத்த நாளங்கள் மூலம் மூடிக் கொண்டுள்ளன. இரத்தத்தோடு கலந்து வரும் கழிவுப் பொருளான சிறுநீரை இக்குழாய்கள் உறிஞ்சிக் கொள்கின்றன. இவ்வாறு உறிஞ்சப்படும் சிறுநீரின் அளவு சுமார் 1 லிட்டர் முதல் 1½ லிட்டர் வரையிலாகும். நுண் குழாய்களால் உறிஞ்சப்பட்ட சிறுநீர் சுமார் 30 செ.மீ. நீளமுள்ள குழாய் ஒன்றின் மூலம் அடிப்பகுதியில் அமைந்துள்ள சிறுநீர்ப் பையினுள் சென்றடைகிறது. இச் சிறுநீர்ப்பை ஒருவித சவ்வினால் ஆனது. சுமார் 300 க.செ.மீ. உள்ள இச் சிறுநீர்ப்பையில் போதிய அளவு சிறுநீர் சேர்ந்தவுடன் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு உண்டாகும். அப்போது புறக் குழாயாக அமைந்துள்ள ஆண் குறி அல்லது பெண்குறி மூலம் சிறுநீர் வெளியேற்றப்படுகிறது.

சிறுநீரில் சர்க்கரைச்சத்து அல்லது அல்புமின் கலந்திருந்தால் அது நோய் உண்டாகியிருப்பதன் அறிகுறியாகக் கருதப்படும். சிறு நீர்ச் சோதனை மூலம் இதை தெளிவாகக் கண்டறிய முடியும்.