இளையர் அறிவியல் களஞ்சியம்/சுரப்பிகள்
சுரப்பிகள் : இவை ஆங்கிலத்தில் “கிளாண்ட்ஸ்’ (Glands) என்று அழைக்கப்படுகிறது. உடல் உறுப்புகள் செவ்வனே இயங்குவதற்கும் உண்ணும் உணவு சக்தியாக மாறுவதற்கும் உடலுக்குச் சில வேதியியற் பொருட்கள் தேவைப்படுகின்றன. இவ்வேதியியற் பொருட்களைச் சுரப்பனவே சுரப்பிகள் என அழைக்கப்படுகின்றன.
வாயில் உமிழ்நீர்ச் சுரப்பிகளிலிருந்து உமிழ் நீர் சுரக்கிறது. இச்சுரப்பிகள் நாக்கின் அடிப்பகுதியிலும் கன்னத்தின் உள் பக்கத்திலுமாக அமைந்துள்ளன. உண்ணும் உணவில் உமிழ் நீர் கலக்க உணவு செரிப்பதற்கேற்ப கூழ் நிலையில் பதமடைகிறது. இதனால் உணவு எளிதாக சீரணமாக இயல்கிறது.
உமிழ் நீர்ச் சுரப்பி போன்றே வேறுசில சுரப்பிகளும் உடலில் வேறுபல பகுதிகளில் உள்ளன. அவற்றுள் பிட்யூட்டரிச் சுரப்பியும் ஒன்று. இது மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. இச்சுரப்பி நீர் அளவாகச் சுரந்தால் நம் உயரமும் சாதாரண நிலையில் இருக்கும். அளவுக்கு அதிகமாகச் சுரக்கும் நீரின் அளவிற்கு அதிகமான வளர்ச்சி ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். வேறுசில சுரப்பிகள் சுரப்பதற்கும் பிட்யூட்டரி சுரப்பி காரணமாய மைந்துள்ளது. ஏனெனில் சுரப்பிகள் யாவும் தனித்தனியே ஒரு வகையில் ஒருங்கிணைந்தே செயல்படுகின்றன. இதனால் உடல் வளர்ச்சியும் நலமும் ஒருங்கே விளைகின்றன. உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் உரிய முறையில் வெளியேறுவதற்கும் சுரப்பிகளே காரணம். கண்ணீர்ச் சுரப்பிமூலம் கண்ணீர் வெளிப்படுகிறது. கண்ணீர் அடிக்கடி வெளிப்படுவதால் கண்கள் தூய்மையாகின்றன.
தோலில் இருக்கும் வியர்வைச் சுரப்பிகள் போல செய்வதால்தான் இரத்தத்திலிருந்து கழிவுகள் வியர்வையாக வெளியேற்றப்படுகின்றன.