உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/சோடியம்

விக்கிமூலம் இலிருந்து

சோடியம் : இது ஒரு தனிமம் ஆகும். இது கார உலோகமாகும். 1807ஆம் ஆண்டு டேவி (Davy) என்பார் இத் தனிம உலோகத்தை உருக்கிய சோடியம் ஹைட்ராக்சைடை மின் பகுப்பு மூலம் பிரித்தெடுத்தார். நீர்ம அம்மோனியா திரவத்தில் கரைந்து நீலநில கரைசலைத் தரும். செயற்கை ரப்பர் தயாரிக்கும் தொழிலில் இது ஒரு வினை வேக மாற்றியாக பயன்படுகிறது. பாதரசத்தோடு கலந்த சோடியம் ரசக் கலவை ஒரு சிறந்த ஒடுக்கியாக பயன்படுகிறது. சோடியத்தோடு குளோரின் வாயுவுடன் சேர்ந்து வினையுற்று சோடியம் குளோரைடு எனும் சேர்மம் கிடைக்கிறது. இதுவே நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் உப்பு.

தனிச் சோடியம் உலோகம் மென்மைத் தன்மையுடன் இருக்கும். எனவே, இதை எளிதாக வெட்ட முடியும். பிராணவாயுவாகிய ஆக்சிஜனுடனும் நீருடனும் சேர்ந்து எளிதில் வினைப்படும் தன்மை இதற்கு உண்டு. இது காற்றில் எரியும் தன்மையுடையதாதலின் இஃது மண்ணெண்ணெயில் போட்டு பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. *

தனிச் சோடியத்தைவிட அது பிற பொருள்களுடன் சேர்வதால் உண்டாகும் சேர்மப் பொருளே அதிகப் பயன்பாடுடையதாகிறது. உப்பாகிய சோடியம் குளோரைடு மற்றும் சோடியம் கார்பனேட் போன்றவைகள் இத்தகைய சேர்மங்களாகும். கடல் நீரில் மிகப் பெரும் அளவில் கிடைக்கும் சேர்மப் பொருளான சோடியம் குளோரைடாகிய உப்பிலிருந்து மின் பகுப்பு முறையில் தனிச் சோடியம் பிரித்தெடுக்கப்படுகிறது.