இளையர் அறிவியல் களஞ்சியம்/ஜீன்

விக்கிமூலம் இலிருந்து

ஜீன் : ஜீன் எனும் சொல்லுக்குத் தமிழில் 'மரபணு’ என்பது பொருளாகும். பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து வரும் சில குணாதிசயங்களைக் கட்டுப்படுத்தும் மரபுக்கூறு உயிரணுவாகும். இம்மரபணுக்களால் தான் பாட்டன் வழி தந்தையும் தந்தை வழி மகனும் தலைமுறை தலைமுறையாகச் சில குறை நிறை பண்புகளைத் தொடர்ந்து பெற முடிகின்றது.

இம் மரபணுவானது உயிரணுக்களின் உட்கருவில் 'குரோமோசோம்கள்' என்ற நிறக் கோலுண்டு. அதில் இவை மணி கோத்தாற் போன்று நீளமாக அமைந்திருக்கும் ஜீன்கள். மனிதர்கட்கு மட்டுமல்ல, விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றிலும் உண்டு. ஒரு தாவரச் செடியோ அல்லது விலங்கு ஈன்ற குட்டியோ, அல்லது மனிதக் குழந்தையோ பிறந்தவுடன் பெற்றோரை முற்றிலுமாகப் பிரதிபலிப்பதில்லை. வளர வளர தன் பெற்றோர்களின் அல்லது முந்தையோரின் குணப்பண்புகளை-வடிவத்தைப் பிரதிபலிக்கும். இவ்வாறு பாரம்பரியத்தை மீண்டும் வெளிப்படுத்த பண்புக் காரணியாக அமைவது இந்த ஜீன்களேயாகும்.