இளையர் அறிவியல் களஞ்சியம்/ஜெகதீச சந்திர போஸ்
ஜெகதீச சந்திர போஸ் : இந்திய அறிவியல் மேதைகளுள் குறிப்பிடத்தக்க சிறப்புக்குரியவராக விளங்குபவர் சர் ஜெகதீச சந்திர போஸ் ஆவார். இவர்தான் முதன்முதலில்
தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதைக் கண்டுபிடித்துக் கூறியவர். இவர் வங்காள தேசத் தலைநகரான டாக்காவுக்கு அருகில் உள்ள காரிக்கல் எனும் கிராமத்தில் 1858ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் பகவான் சந்திரபோஸ் என்பதாகும்:
இவர் கல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் படித்து வந்த போதே தாவரங்கள் பற்றியும் பிராணிகளைப் பற்றியும் நிறைய அறிய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். எனினும், தம் ஆசிரியரின் தூண்டுதலின் பேரில் இயற்பியலைப் பாடமாக எடுத்துப் பயின்று பட்டதாரியானார். மருத்துவக் கல்விக்கென லண்டன் சென்ற இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானம் பயின்றார். பின் லண்டன் பல்கலைக் கழகத்தில் பயின்று டாக்டர் பட்டம் பெற்றார்.
தம் இருபத்தைந்தாம் வயதில் 1885இல் இந்தியா திரும்பினார். பின்பு கல்கத்தாவிலுள்ள மாநிலக் கல்லூரியில் ஆசிரியராக அமர்ந்தார். இயற்பியல் கற்பிக்கும் ஆசிரியராகப் பணியாற்றி வந்த போதிலும் உயிரியல் ஆய்விலேயே இவருக்கு நாட்டம்மிகுந்து வந்தது. இதற்கான ஆய்வுக்கூடமொன்றை பெரும் இடர்ப்பாட்டிற்கிடையே உருவாக்கி அங்கு தம் விஞ்ஞான ஆய்வுகளை முனைப்புடன் செய்து வந்தார். இவர் தம் ஆசிரியப் பணியினின்றும் ஓய்வு பெற்ற பிறகு தம் ஆய்வுக் கூடத்தை மேலும் விரிவுபடுத்தி விரிவான விஞ்ஞான ஆய்வுக்கு முயற்சி மேற்கொண்டார். அரசாங்கமும் இவரது முயற்சிக்குத் துணை நின்றது. அரசின் நிதியுதவியோடும் ஒத்துழைப்போடும் 'போஸ் ஆராய்சிக் கழகம்'எனும் அமைப்பை 1917ஆம் ஆண்டு நவம்பரில் உருவாக்கினார். அது வரை அவர் ஆற்றியுள்ள அறிவியல் ஆய்வுப் பணிக்கென ஆங்கில அரசு அதே ஆண்டில் ‘சர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
இவரது முனைப்பான உயிரியல் ஆராய்ச்சியின் விளைவாக மனிதர்களைப் போன்றே தாவரங்களுக்கும் உணர்ச்சியும் உயிரும் உண்டு என்பதை நிலை நாட்டினார். நாம் நச்சுப் பொருட்களை உண்டால் என்ன வேதனைகளை அடைவோமோ அதே போன்று தாவரங்களும் நச்சுப் பொருட்களால் துன்புறுகின்றன என ஆய்ந்து கூறினார். மரங்களை ஓரிடத்திலிருந்து அப்படியே பெயர்த்து வேரிடத்தில் வைக்கும் புதிய முறையைக் கண்டு பிடித்தவரும் இவரே. தாவரங்களின் வளர்ச்சியை துல்லியமாய் கணக்கிடுவதுடன் ஒரு கோடி மடங்கு பெரிதுப்படுத்தும் புதிய கருவியைக் கண்டுபிடித்தவரும் இவரேயாவார்.
இவருக்கு 1917ஆம் ஆண்டில் இங்கிலாந்து மன்னர் 'நைட்' (Knight) பட்டமளித்தார். 1920இல் இவரது ஆராய்ச்சிப் பணியைப் பாராட்டிய ராயல் சொசைட்டியினர் 1920ஆம் ஆண்டில் இவரைத் தன் உறுப்பினராக (F. R. S) ஏற்றுச் சிறப்பித்தனர்.
இவர்தம் ஆய்வுகளையும் உயிரியல் பற்றிய கருத்துக்களையும் நூல் வடிவில் வெளியிட்டுள்ளார். இவர் தமது 79ஆம் வயதில் 1937இல் தன் பிறந்த நாளைக்கு ஒரு வாரம் முன்னதாக மறைவெய்தினார்.