இளையர் அறிவியல் களஞ்சியம்/டெட்டனஸ்

விக்கிமூலம் இலிருந்து

டெட்டனஸ் : இது ஒரு உயிர்க்கொல்லி நோயாகும். இஃது "ரண ஜன்னி" எனவும் அழைக்கப்படுகிறது. இந்நோய் கண்டவரின் தசைநார்கள் இறுக்கமடைந்து வாய்திறக்க முடியாத நிலை ஏற்படும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் இந்நோய் ஏற்பட்ட சில மணி நேரத்துக்குள்ளாகவே மரணிக்க நேரலாம்.

இந்நோய் 'கிளாஸ்டிரியம் டெட்டனின்’ எனும் நுண்ணிய நூலிழைக் கிருமிகளால் ஏற்படுகிறது. இந்நூல் நச்சுக் கிருமிகள் மனிதக் கழிவுகளில் (மலம்) காணப்படும். மண் தரையிலும் வாழ்கின்றன. தரையில் விழுந்து காயப்படும் ஒருவரது காயத்துக்குள் மண் செல்லுமானால் இந்நுண் நோய்க்கிருமிகள் எளிதாக உடலுள் புகுந்து நோயைத் தோற்றுவிக்கும். அத்தகைய சந்தர்ப்பங்களில் மண் தோய்ந்த சிராய்ப்புக் காயம்பட்டவர் உடனடியாக காயத்தை நன்கு கழுவி நச்சுக் கொல்லி மருந்திட்டு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். தேவைப்படின் ஊசி மூலம் நச்சு முறி மருந்தை உடலினுள் செலுத்துவர். இதைச் செய்யத் தவறினால் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் டெட்டனஸ் நுண்கிருமிகள் உடலில் நன்கு பரவி தசை நார்களை இறுக்கமடையச் செய்துவிடும். உடல் விரைப்படைந்து விடும். இதனால் எளிதில் இறப்பு ஏற்பட ஏதுவாகிவிடும். இந்நோய் அதிகமாக இளஞ்சிறார்களைப் பாதித்து மரணிக்கச் செய்கிறது.