இளையர் அறிவியல் களஞ்சியம்/டெலெக்ஸ்
டெலெக்ஸ் : 'தொலை எழுதி', என்று தமிழில் அழைக்கப்படும் 'டெலெக்ஸ்’ இன்றுள்ள செய்தித் தொடர்பு சாதனங்களுள் முக்கியமானதொன்றாகும். இக்கருவி மூலம் வெகு தொலைவில் உள்ள இடங்களுக்கு எழுத்து வாயிலாகவே செய்தியை அனுப்ப முடியும். அவ்வாறே வேற்றிடங்களிலிருந்தும் எழுத்து வடிவில் செய்திகளை விரைந்து பெற முடியும். இதற்கான கருவி 'டெலிபிரின்டர்’ (Teleprinter) என்று அழைக்கப்படுகிறது. டெலெக்ஸ் என்பது சுருக்கப் பெயராகும்.
தொலை எழுதிக் கருவியில் தட்டச்சுப் பொறியில் அமைந்திருப்பதுபோல் எழுத்துக்கள் பொறித்த பொத்தான்கள் இருக்கும். அனுப்பும் செய்திக்கேற்ப எழுத்துப் பொத்தான்களை அழுத்தும்போது செய்தி தொலை தூரத்தில் உள்ள எந்திரத்தில் அவ்வெழுத்துக்களாக அப்படியே பதிவாகும்.
தேவைப்படுவோர் தபால்தந்தி துறையினரிடம் கட்டணம் செலுத்தி டெலெக்ஸ் மூலம் செய்தி அனுப்பலாம். தாங்களாகவே தொலை எழுதி எந்திரத்தைப் பெற்று பயன் படுத்த விழைவோர் வாடகைக்கு இவ்வெந்திரத்தைப் பெற்றுப் பயன்படுத்திக் கொள்ளலாம். உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டுக்கும் டெலெக்ஸ் மூலம் செய்தியனுப்ப முடியும். தற்காலத்தில் தந்திச் செய்திகளும் டெலெக்ஸ் மூலம் அனுப்பப்படுகின்றன.