இளையர் அறிவியல் களஞ்சியம்/தசை

விக்கிமூலம் இலிருந்து

தசை : நம் உடலில் ஒரு குறிப்பிட்ட வகை உயிரணுக்கள் (Cell) இணைப்புத் திசுக்களை உருவாக்குகின்றன. அவை உடலின் பல்வேறு பகுதிகளையும் ஒருங்கிணைக்கின்றன. இணைப்புத் திசுக்களில் உள்ள உயிரணுக்கள் அனைத்தும் ஒருங்கிணைகின்றன அல்லது இறுக்கமடைகின்றன. உடலின் சில பகுதிகளில் இவ்வுயிரணுக்கள் ஒருங்கிணைவில் தனித்தன்மை அடைகின்றன. இவ்வாறு இவைகள் தசைகளாக மாற்றமடைகின்றன.

பன்மடங்கு பெரிதாக்கப்பட்ட தசைத் திசுக்கள்

தசை உயிரணுக்கள் உடலின் எப்பகுதியெல்லாம் அடிக்கடி அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றனவோ அவை பலவாகப் பல்கிப் பெருகி ஒன்றிணைந்து மென்மை மிகு நூலிழைபோலாகின்றன. உடலின் பல பகுதிகளில் இத்தகைய மென்மையான தசைகளிலிருப்பதைக் காணலாம். இவை பல்வேறு உறுப்புகள் நன்கு செயல்பட துணை செய்கின்றன. சான்றாக மென் தசைகள் கண்களை விரியச் செய்கின்றன. சுவாசிப்பதை முறைப்படுத்துகின்றன. குடற் பகுதிகளை நன்கு செயல்படச் செய்கிறது.

மென் தசைகளின் இழைகள் மிகவும் உறுதியானவை. ஆனால், மந்தமானவை. எனவே எப்போதாவது விரைந்து இயங்கவேண்டிய அவசிய மேற்பட்டால் அப்போது உடல் மென் தசைகளை மேலும் திறம்பட்டதாக ஆக்குகிறது.

மனித உடலில் 689 தசைகள் உள்ளன. தசைகள் உடலின் சதைப் பற்றுகளாகும். கசாப்புக் கடைக்குக் கொண்டு வரப்படும் இறைச்சிகள் தசைகளேயாகும். தசைகள் பல் வேறு அளவுகளில் பலவகை வடிவுகளில் உள்ளன. நடுத்தர அளவுள்ள தசையில் ஒரு கோடி தசை உயிரணுக்கள் (Cells) உள்ளன.

உடம்பு முழுமையும் ஆறாயிரம் கோடி உயிரணுக்கள் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர்.

ஆறாயிரம் கோடி செல்களில் ஒவ்வொன்றும் பத்து சிலிண்டர்களைக் கொண்ட மோட்டாரை வரிசையாக அடுக்கி வைத்ததுபோல் உள்ளன. இதன் சிலிண்டர்கள் திரவம் நிரப்பப்பட்ட நுண் பெட்டிகள்போல் அமைந்துள்ளன. மூளையானது செய்தியை இந்த நுண் அறைகளுக்கு அனுப்பியவுடன் தசை செயல்படுகிறது.