இளையர் அறிவியல் களஞ்சியம்/தெர்மாஸ் கலம்

விக்கிமூலம் இலிருந்து

தெர்மாஸ் கலம் : சூடான அல்லது குளிர்ந்த பால் பொருட்களைச் சூடு அல்லது குளிர்ச்சி குறையாமல் நீண்ட நேரம் வைத்திருக்கப் பயன்படும் தட்ப, வெப்பநிலைக் காப்புக்கலம் தெர்மாஸ் கலம் (Thermos Flask) ஆகும். இதை வெற்றிடக் கலம் (Vaccum Flask) என்றும் அழைப்பார்கள்.

சாதாரணமாக நன்கு சூடான கொதி நீரை ஒரு பாத்திரத்தில் வைத்திருந்தால் சிறிது நேரத்தில் வெப்பம் தணிந்து குளிர்ந்து விடுகிறது. இதற்குக் காரணம் வெந்நீரின் வெப்பத்தைப் பாத்திரத்தின் பக்கங்கள் கடத்தி வெளிக்காற்றுடன் சேர்த்து விடுவதேயாகும். இது பாத்திரத்தின் இயல்பு ஆகும். பாத்திரம் திறந்திருந்தால் மேற்பகுதி மூலம் வெளிக் காற்று வெப்பத்தை ஈர்த்துப் பரவச் செய்கிறது. ஆனால், இந்நிலை தெர்மாஸ் கலத்தில் ஏற்படுவதில்லை.

இக்கலம் மெல்லிய இரு கண்ணாடிச் சுவர்களைக் கொண்ட குடுவையாகும். இக் கண்ணாடிச் சுவர்களுக்கிடையேயுள்ள காற்று முற்றிலுமாக வெளியேற்றப்பட்ட வெற்றிடக் குடுவையாகும். காற்று வெளியேற்றப்பட்டதன் அறிகுறியாக இக்குடுவையின் கீழ்ப்பகுதியில் வார்ப்பு மூலம் மூடப்பட்ட ஒரு சிறுமுளை நீட்டிக் கொண்டிருக்கும். இம்முனை சேதமடையாதவாறு ஒரு தக்கை மீது நிறுத்தி உலோகம் அல்லது பிளாஸ்டிக் உறையுள் வைக்கப்பட்டிருக்கும். அடிப்பகுதியில் உள்ள தக்கை தாங்கி கண்ணாடி குடுவையையும் அதன் அடிப்பகுதி முனைக்கும் அதிர்ச்சி ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

இக்கண்ணாடிக் குடுவையில் மூடி வைக்கப்படும் பொருளின் வெப்பம் அல்லது குளிர் வெளியேறாதபடி இதிலுள்ள வெற்றிடம் காக்கிறது. ஏனெனில், காற்று இல்லாத வெற்றிடத்தால் வெப்பத்தை அல்லது குளிர்ச்சியை வெளியேற்ற முடியாது. மேலும், கண்ணாடிச் சுவர்கள் அலுமினியக் கரைசல் பூச்சைக் கொண்டிருப்பதால் வெப்பச் சலனம் அல்லது வெப்பக் கதிர் வீச்சு மூலம் வெப்பம் வெளியேற வாய்ப்பில்லாமல் போகிறது. இதனால், தெர்மாஸ் கலத்தில் வைக்கப்படும் சூடான அல்லது குளிர்ந்த பொருள் பல மணி நேரங்கள் சூட்டையோ, குளிர்ச்சியையோ இழக்காமல் இருக்கிறது.