இளையர் அறிவியல் களஞ்சியம்/தொண்டை அடைப்பான்

விக்கிமூலம் இலிருந்து

தொண்டை அடைப்பான் : ஆங்கிலத்தில் 'டிப்தீரியா' (Diptneria) என அழைக்கப்படும் தொண்டை அடைப்பான் ஒரு கொடிய தொற்று நோயாகும். இந்நோய் பெரும்பாலும் சிறுவர்களையே அதிகம் பீடிக்கிறது. குறிப்பாக இரண்டு முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளே இந்நோய்க்காளாகின்றனர். 'கார்னிபாக்டீரியம்’ (Corynebacterium) என்ற பாக்டீரிய கிருமியின் தாக்குதலால் இந்த நோய் வருகிறது.

இந்நோய் குறிப்பிட்ட பருவகாலங்களில் அதிகமாக ஏற்படுகிறது. குளிர்காலத்தில் சற்றுக் குறைவாக இருக்கும். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் பெரும்பாலும் வருவதே இல்லை. காரணம், நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட தாய்ப்பாலை குழந்தைகள் குடித்து வருவதேயாகும்.

இந்நோய் கண்டவுடன் காய்ச்சல், தலைவலி உண்டாகும். அதைத் தொடர்ந்து தொண்டை வலி ஏற்படும். பிறகு உடல் சோர்வும் பசியின்மையும் உண்டாகும். இந்த அறிகுறிகளைத் தொடர்ந்து தொண்டையில் வீக்கமும் ஏற்படுவதுண்டு. அவ்வாறு தொண்டை வீக்கம் ஏற்படும்போது மூச்சு விடுவது சிரமமாகிவிடும். இதனால் மூச்சுத் திணறல் உண்டாகும். இதன் விளைவாக இதயத்துக்கும் நரம்பு மண்டலத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிடும். இதன்மூலம் இறக்க நேரிடுகிறது.

எனவே, தொண்டை அடைப்பான் நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டவுடனேயே மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெறவேண்டும். தாமதமேற்படின் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.

இந்நோய் வராமல் பாதுகாத்துக்கொள்வதில்தான் அதிகம் கவனம் செலுத்தவேண்டும். முக்கியமாகக் குழந்தை பிறந்த மூன்றாம் மாதத்திற்குள்ளாக தொண்டை அடைப்பான் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் பொருட்களை பிறர் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பெரும்பாலும் இந்நோய் மூச்சுக்காற்றால் விரைந்து பரவுவதால் நோயாளியின் மூச்சை பிறர் சுவாசிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். நோயாளியின் எச்சிலை எரித்துவிட வேண்டும். துணிமணிகளை கொதிக்கும் நீரில் போட்டு எடுக்கவேண்டும். நன்கு காய்ச்சிய நீரையும் பாலையுமே பயன்படுத்தவேண்டும். இவ்வாறு செய்வதால் இந்நோய் மேலும் பிறரிடம் பரவாமல் தடுக்க முடியும்.