இளையர் அறிவியல் களஞ்சியம்/தொலைக்காட்சி
தொலைக்காட்சி : ஆங்கிலத்தில் 'டெலிவிஷன்’ என அழைக்கப்படும் தொலைக்காட்சி
இன்றைய தொலைத் தொடர்புப் பணியில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. தொலைதூர நிகழ்ச்சிகளை காட்சியோடும் ஒலியோடும் நாம் இருக்கும் இடத்துக்கே கொண்டுவந்து தரவல்லது தொலைக்காட்சி.
வானொலியும் தொலைக்காட்சியும் ஒரே முறையில்தான் செயற்படுகின்றன. வானொலியின் ஒலி அலைகள் வான் வழி அனுப்பப்படுவது போன்றே தொலைக்காட்சியின் ஒளி, ஒலி அலைகள் வான்வழியே அனுப்பப்படுகின்றன. வானொலிப் பெட்டி ஒலி அலைகளை அலை வாங்கி மூலம் பெற்று மீண்டும் ஒலியாக மாற்றி ஒலிபரப்புகிறது. அதேபோன்று மின் அலைகளாக வானில் அனுப்பப்பட்ட ஒலி, ஒளி அலைகளை ‘வான் அலை வாங்கி’ (அன்டென்னா) மூலம் பெற்று தொலைக் காட்சி ஒளிபரப்புகிறது. தொலைக்காட்சிப் பெட்டியில் உள்ள திரை, காட்சிகளைத் தெளிவாகக் காட்ட உதவுகிறது.
உலகின் எப்பகுதியில் எந்நிகழ்ச்சி நடைபெற்றாலும் அதனை விரைந்து நாம் இருக்கும் இடத்திற்கே கொண்டுவந்து தருகிறது. தொலைக்காட்சி நிலவுலகக் காட்சிகளை மட்டுமின்றி சந்திரனில் முதன்முதல் மனிதன் காலடி எடுத்து வைத்த காட்சிகளையும் தொலைக்காட்சிமூலம் உலகம்கண்டுகளித்தது. ஆற்றல்மிகு செய்தித் தொடர்புச் சாதனமாக அமைந்துள்ள தொலைக்காட்சிக் கருவி 1930ஆம் ஆண்டில் சுவேரிக்கின் எனும் அமெரிக்க அறிவியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. தொடக்க காலத்தில் 160 கி.மீ. தூரம் வரையே ஒளி பரப்ப முடிந்தது. அதன்பின் நடைபெற்ற தொடர் ஆய்வுகளின் விளைவாக நீண்ட தூரம் காட்சிகளை ஒளிபரப்ப முடிந்தது. இன்று செயற்கைக் கோளின் துணை கொண்டு உலகெங்கும் நடைபெறும் காட்சிகளை உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒலிபரப்ப இயலுகின்றது.
தொடக்கத்தில் கறுப்பு-வெள்ளைக் காட்சிகளை மட்டுமே ஒளி பரப்ப முடிந்தது. இன்று பல வண்ணக் காட்சிகள் ஒளி பரப்பப்படுகின்றன. டிரான்சிஸ்டர் கையடக்க வானொலிப் பெட்டியைப்போன்றே இன்று கையடக்கத் தொலைக்காட்சி பெட்டிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதன்மூலம் தொலைக்காட்சிகளை நாம் செல்லுமிடமெல்லாம் சிரமமின்றிக் கண்டுகளிக்க இயலுகின்றது. இன்று கல்வி வளர்ச்சிக்குத் தொலைக்காட்சிப் பேருதவியாகத் துணைபுரிந்து வருகிறது.