இளையர் அறிவியல் களஞ்சியம்/தொலைநோக்கி
தொலைநோக்கி : 'டெலஸ்கோ' என்று அழைக்கப்படும் தொலைநோக்கிக் கருவி தொலைவிலுள்ளவற்றை நம் பார்வைக்குத் தெளிவாகப் புலப்படாத பொருள்களை இருந்தவிடத்தில் இருந்தவாறே காண உதவுகிறது. தொலைவிலுள்ள பொருட்களை வெகு அருகாகவும் தெளிவாகவும் காட்டும் வண்ணம் உருப்பெருக்கம் செய்து எளிதாக நாம் காண உதவுகிறது. இதன் துணைகொண்டு வானவியல் ஆய்வு திறம்படச் செய்ய இயலுகின்றது. விண்ணில் உள்ள கோளங்கள், நட்சத்திரங்களையெல்லாம் அருகாகக் கண்டு ஆராய்ச்சி செய்ய முடிகின்றது. தொலை நோக்கிக் கருவிகள் கடற்பயணத்தின்போது தூரத்திலுள்ள நிலப்பகுதிகளையும் தூரத்தில் சென்று கொண்டிருக்கும் பிற கப்பல்களையும் எளிதக இனங்காணப் பெருந்துணைபுரிகிறது.
தொலைநோக்கியை முதன்முதலில் கண்ட றிந்தவர் ஹான்ஸ்லிப்பர்ஷி எனும் நெதர்லாந்து
நாட்டுக்காரர் ஆவார். இவரும் எதிர்பாராத நிலையிலேயே வேறொரு ஆய்வின் போது எதிர்பாராவண்ணம் தொலைநோக்கிக் கருவியைக் கண்டுபிடித்தார். 1808ஆம் ஆண்டில் இரு லென்ஸ்கள் பொருத்தப்பட்ட கருவி வழியாகப் பொருட்களைப் பார்க்க நேர்ந்தபோது, அப்பொருள் பெரியதாகவும் வெகு அருகில் இருப்பது போலவும் தோன்றியது. இதை மேலும் மேலும் ஆய்ந்து தொலைநோக்கிக் கருவியைக் கண்டுபிடித்தார். பின்னர், இஃது மேலும் மாற்ற திருத்தங்களைப் பெற்று சரியான வடிவமைப்பைப் பெற்றது. இதன் பயன்பாடு உலகெங்கும் விரைந்து பரவியது.
தொலைநோக்கியைக் கொண்டு தூரத்தில் உள்ள நிலவுலகப் பொருட்களை மட்டும் அருகாகக் காண்பதோடு அமையாது. கண்னுக்கெட்டா நெடுந்தொலைவில் உள்ள கோள்களை ஆராயும் வகையில் செயல்பட்டவர் வானவியல் அறிஞர் கலிலியோ ஆவார். இதற்கான தொலைநோக்கிக் கருவிக்கான ஆற்றலுள்ள கண்ணாடி வில்லைகளைக் கண்டுபிடிப்பதிலும் தொலைநோக்கிக் கருவியை வடிவமைப்பதிலும் பெருங்கவனம் செலுத்தினார். அதில் பெரும் வெற்றியும் பெற்றார். முதன்முதலாக வானத்தில் சந்திரனின் மேற்பரப்பையும் அங்கே காணப்பட்ட மலைகளையும் பெருங்குழிகளையும் தொலை நோக்கி மூலம் கண்ணால் கண்டு உலகுக்கு உணர்த்தினார்.சூரியனின் கரும்புள்ளிகளையும் சனிக்கிரகத்தைச் சுற்றி அமைந்துள்ள வளையத்தையும் பற்றி முதன்முதலில் கண்டறிந்து கூறியவரும் இவரே ஆவார்.
தொலைநோக்கிகளில் இருவகைகள் உள்ளன. ஒன்று லென்ஸ்களைக் கொண்டு அமைக்கப்பட்டதாகும். இஃது ஒளி விலகும் தொலைநோக்கி எனப்படும். மற்றொன்று லென்ஸ்களுக்குப் பதிலாக ஆடிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கருவியாகும். இது 'பிரதிபலிக்கும் தொலை நோக்கி’ என அழைக்கப்படுகிறது.
தொலை நோக்கிக் கருவியில் கேமெரா பொருத்தப்பட்டால் அஃது தொலை தூரக்காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது. நம் கண்களுக்கு எளிதில் புலனாகாத நட்சத் திரங்களைக்கூட இத்தகைய தொலைநோக்கிகளோடு பொருத்தப்பட்ட கேமெராக்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. நாம் சாதாரணமாகக் கையாளும் படப்பிடிப்புக் காமெரா விரைந்து பிம்பங்களைப் பதிவு செய்கிறது. ஆனால் தொலைநோக்கியோடு இணைந்த காமெராக்கள் தொலைவைப் பொறுத்து பிம்பங்களை நீண்ட நேரம் பதிவு செய்து படம்பிடிக்கிறது. வானவியல் ஆய்வின் தொலைநோக்கிகளின் பங்கு அளவிடற்கரியதாகும்.