இளையர் அறிவியல் களஞ்சியம்/தொழுநோய்

விக்கிமூலம் இலிருந்து

தொழுநோய் : முன்பு தொழுநோய் ஒரு பயங்கர தொற்று நோயாகக் கருதப்பட்டது. இதனால், தொழுநோய் கண்டவர் தனிமைப்படுத்தப்பட்டார். இறக்கும்வரை தனி வாழ்வு வாழ வேண்டிய நிலை இருந்தது. ஆனால், இன்று தொழுநோயைப் பொறுத்தவரை நிலைமை முற்றாக மாறிவிட்டது.

தொழுநோய் பலவகையினவாகும். ஒரு சிலவற்றைத் தவிர மற்ற வகைகள் தொற்றும் தன்மை அற்றவை. இவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையாக மருத்துவம் செய்து கொண்டால் எளிதில் விரைந்து குணமடைந்து விட முடியும்.

தொழுநொய் 'மைக்கோ பாக்டீரியம் லெப்ரோ' (Mico bacterium leppre) என்னும் கிருமிகளால் உண்டாகிறது. இக்கிருமிகள் முதலில் சருமத்தையும் பின்னர் நரம்புகளையும் அல்லது இரண்டையும் பாதிக்கிறது. தொழுநோயை உண்டாக்கும் கிருமிகளை ஹேண்சன் (Hansen) எனும் நார்வே நாட்டு ஆய்வாளர் கண்டறிந்தார்.

தொழுநோய்க் கிருமிகள் முதலில் சருமத்தைப் பாதிக்கின்றன. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமிருப்பின் உடல் தோலில் சிறுசிறு முடிச்சுகள் போன்ற கட்டிகளை உருவாக்குகின்றன. இவை மிக மெதுவாகவே உருவா கின்றன. இவற்றின் பாதிப்பு நெற்றி, மூக்கு, காது. உதடு ஆகிய பகுதிகளில் அதிகமாக இருக்கும்.

தொழுநோய்க் கிருமிகள் நரம்பைப் பாதித்தவுடன், அப்பகுதி உணர்ச்சியற்றுப் போகிறது. இதனால், அப்பகுதிகள் எளிதில் காயம்பட நேர்கின்றது. உணர்ச்சியற்ற அப்பகுதியை எளிதில் கீறினாலோ அல்லது சுட்டாலோ நோயாளிக்கு உரைப்பதில்லை. இதனால், தொழுநோயாளியின் தசைப் பகுதி பயனற்றதாகி விடுகிறது. நாளடைவில் விரல்போன்ற பகுதிகள் வளைய நேர்கின்றது. சில சமயம் கை, கால், விரல் எலும்புகள் குறுகிவிடுகின்றன. நாளடைவில் இல்லாமல் மறைந்தும் விடுகின்றன.

தொழுநோய் உலகெங்கும் காணப்படுகிறது. குறிப்பாக வெப்ப மண்டல நாடுகளாக வட ஆஃப்ரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. அமெரிக்காவின் தென் பகுதியிலும் சிறிய அளவில் இந்நோய் உண்டு.

தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகள் தோன்றும்போதே அதைக் கண்டறிந்து, அந்நோய்க்கென கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘ஆன்டிபயாடிக்' மருந்துகளைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் எளிதில் குணமடைந்து விடலாம்.இதற்கு நாம் உடலைப் பரிசோதித்து நோயின் ஆரம்ப அறிகுறிகள் ஏதும் உண்டா என டாக்டர் அல்லது தொழுநோய் ஆய்வாளர்கள் மூலம் கண்டறிய வேண்டும்.