உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/தொழில் நுட்பவியல்

விக்கிமூலம் இலிருந்து

தொழில் நுட்பவியல் : தொழிற்புரட்சியின் விளைவாக விரைந்து பொருள்களை உற்பத்தி செய்யப் பல்வேறு எந்திரங்களும் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகளின் அமைப்பையும் இயங்கு முறைகளையும் விவரிப்பதே தொழில் நுட்பவியல் ஆகும். இதை ‘டெக்னாலஜி'(Technology) என்றும் கூறுவர்.

தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சியினால் புதுப்புது எந்திரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் உற்பத்திபெருகுகிறது. தொழிற்சாலைகளின் பெருக்கத்திற்கேற்ப தொழில்துறை வளர்ச்சிகளும் செழுத்தோங்கியுள்ளன. புதிய புதிய தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றன. புதிய தொழில்நுட்ப அறிவு வளர்ச்சி ஆற்றல் மூலங்களான எண்ணெய், புனல்மின், அனல்மின் போன்றவற்றைவிட அணு சக்தியைத் தொழில்துறை வளர்ச்சிக்கு எவ்வகையில் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிய அரிய கண்டுபிடிப்புகளை நாளும் நமக்கு வழங்கிவருகிறது. உணவு உற்பத்திக்கு ஆதாரமான விவசாய வளர்ச்சிக்கும் பொருள் உற்பத்திக்கும் நிலைக்களனாக விளங்கும் இயந்திரவியல் துறை, போக்குவரத்துத் துறை மேம்பாட்டுக்கும் பெருந்துணையாய் அமைந்துள்ளது.

தொழில்நுட்ப அறிவு தொழில்நுட்பக் கல்வி மூலம் பெறப்படுகிறது. தொழிற் கல்வி ஏட்டுப் படிப்போடு அமையாது தொழில்நுட்ப பயிற்சி மூலமும் அளிக்கப்படுகிறது. இத்தகைய தொழில்நுட்பக் கல்வியை மருத்துவ, பொறியியல், வேளாண்மைக் கல்லூரிகளும் 'பாலி டெக்னிக்’ என்றழைக்கப்படும் பல் தொழில் கல்விக்கூடங்களும் அளிக்கின்றன.