இளையர் அறிவியல் களஞ்சியம்/தோல் பதப்படுத்தல்
தோல் பதப்படுத்தல் : நீண்ட நெடுங்காலமாகவே ஆடு, மாடு போன்ற விலங்குகளின் தோல் மனிதர்களுக்குச் செருப்பு, குதிரைச் சேணம், நீர்ப்பை முதலானவைகளாகப் பயன்பட்டு வந்துள்ளன. இதற்காக சிறந்த விலங்குகளின் தோலை உரித்து, அதைப் பதனிட்டு, பின் வேண்டிய பொருட்களைச் செய்து கொள்வர்.
இறந்த விலங்கிலிருந்து உரித்து எடுக்கப்படும் பச்சைத்தோல் கெட்டுப் போகா வண்ணம் பாதுகாக்கவே பதப்படுத்தப்படுகிறது. சுமார் மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பு பதப்படுத்தப்பட்ட தோல் எகிப்து நாட்டில் இன்னும் கெடாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதிலிருந்து முறையாகப் பதப்படுத்தப்படும் தோல் நீண்ட காலத்திற்குக் கெடாமல் பாதுகாக்க முடியும் என்பது தெளிவாகிறது.
இன்று தோலின் உபயோகம் வெகுவாக அதிகரித்துள்ளது. ஆடு, மாடு, குதிரை மட்டு மல்லாது பன்றி, பாம்பு, உடும்பு, நெருப்புக் கோழி போன்றவற்றின் தோல்களைப் பதப்படுத்தி பெண்கள் பயன்படுத்தும் அழகிய பைகள், கடிகாரப் பட்டைகள், இடுப்பில் கட்டும் வார்ப்பட்டைகள், மெல்லிய தோலிலான உடைகள் தயாரிக்கப்படுகின்றன.
விலங்கிலிருந்து உரித்து எடுக்கப்படும் பச்சைத்தோல் அதிக நேரமிருந்தால் அழுகி
கெட்டுவிடும். எனவே, உரித்தவுடனே பொடிக்கப்பட்ட உப்புத்தூளை அதன் உட்
பகுதியில் நன்கு தடவுவர். பின்னர் அதனை வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட நீரில் நன்கு ஊறவைப்பார்கள். இதனால் தோலில் உள்ள அழுக்குகள் அப்புறப்படுத்தப்படும். அதன் பின், வேதிப்பொருட்கலவையோடு கூடிய சுண்ணாம்புக்கரைசலில் ஊறவைப்பார்கள். இதனால் தோலின் வெளிப்புறத்தேயுள்ள மயிர்கள் நீக்கப்படுகின்றன. தோலிலுள்ள சுண்ணாம்புக் கரைசலை நீக்கப் பலமுறை அமிலம் கலந்த நீரில் முக்கி எடுப்பர். இப் போது மயிர் மற்றும் அழுக்கு நீக்கப்பட்ட செம்மையான பச்சைத்தோல் கிடைக்கிறது. இதன் பிறகே தோல் முறையாகப் பதனிடப்படும்.
தோலைப் பதனப்படுத்த மூன்று முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சிலவகை மரப் பட்டைகள். காய்களைத் தூளாக்கி நீரில் கலந்த கலவையைக் கொண்டு பதனிடப்படுகிறது. இது 'தாவரப் பதனப்படுத்துதல்’ முறையாகும். குரோமியம், அலுமினியம், இரும்பு முதலான உலோகப் பொருட்களடங்கிய வேதி உப்புக்களைக் கொண்டு பதனிடப்படும். இது தாதுப் பொருள் பதனிடும் முறையாகும். மீன் எண்ணெய் போன்ற எண்ணெய் வகைகளைக் கொண்டு பதனப்படுத்துவது எண்ணெய் பதனிடு முறையாகும்.
மேற்கண்ட முறைகள் நெடுநாளாக இருந்து வரும் முறைகளாகும். இன்று எந்திரங்களின் மூலமே பெரும்பாலும் தோல் பதனிடப்படுகிறது. இவ்வாறு பதனப்படுத்தும் தோல்களை எந்திரங்களே விரைவாக உலர்த்துகின்றன. தோலின் தேவையற்ற பகுதிகளை இயந்திரங்களே வெட்டி ஒழுங்குபடுத்துகின்றன. எந்திரங்கள் மூலமே பதப்படுத்தப்பட்டதோலின் சுருக்கங்கள் போக்கப்பட்டு, பளபளப்பாக மெருகூட்டப்படுகின்றன.
தோல் பதனிட்டுத் தொழிலில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆர்ஜென்டைனா முதலான நாடுகள் சிறந்து விளங்குகின்றன. இந்தியாவிலிருந்து மிகப் பெரும் அளவில் முழுக்கப் பதனிடப்பட்ட, ஓரளவே பதப்படுத்தப்பட்ட தோல்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் கணிசமான அளவு அந்நியச் செலாவணி இந்தியாவுக்குக் கிடைக்கிறது.