இளையர் அறிவியல் களஞ்சியம்/நகம்

விக்கிமூலம் இலிருந்து

நகம் : கை, கால் விரல்களின் பாதுகாப்புக் கேடயமாக அமைந்திருப்பவை நகங்களாகும். மனிதர்களுக்கு உள்ளது போன்ற நக அமைப்பே குரங்கினங்களுக்கும் உள்ளது. விரலின் மேற் பகுதியில் தோலின் அடியில் உள்ள உயிரணுக்களின் அடுக்கிலிருந்து கிளைத்து வரும் நகம் மிக மெதுவான வளர்ச்சியைக் கொண்டதாகும். நகம் நம் தோலின் ஒரு பகுதி. ஆனால், தோலைவிடக் கடினமானது. 'கெரடின்' (Kerotin) என்ற புரதப் பொருளால் ஆனது நகம். இது நம் விரல் நுனி எலும்பின் ஆரம்பத்தில் தொடங்குகிறது, நகத்தில் நாளங்களோ, நரம்புகளோ இல்லை. எனவேதான், நகத்தை வெட்டும்போது வலி தெரிவதில்லை.

நகம் வளர்வதற்கு இரும்புச் சத்து புரதச் சத்து, சிஸ்டின் பாஸ்போலிப்பிட்ஸ், சல்பர் போன்ற பல சத்துக்கள் தேவை.

நகம் ஒரு நோய் காட்டும் கண்ணாடி. நகம் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது மஞ்சள் காமாலைக்கு அறிகுறி. அது வெளிறிப் போயிருந்தால் இரத்த சோகையைக் குறிக்கும். வெண்புள்ளிகள் தெரிந்தால் கால்சியம் சத்துக் குறைவு எனக் கொள்ள வேண்டும். உடம்பில் காசநோயும் கல்லீரல் நோயும் இருந்தால் நகம் நத்தைக் கூடு மாதிரி பெரிதாக வீங்கிக் கொள்ளும். நகம் சொத்தையாகக் காணப்பட்டால் பூஞ்சைக் காளான் உள்ளது என அறியலாம். நகம் நீல நிறத்தில் இருந்தால் இரத்தத்தில் பிராணவாயு (oxygen) குறைந்துள்ளது என்று கொள்ள வேண்டும். நகம் ஆண்டுக்கு சுமார் 8 செ.மீ. நீளம் வளரும். இஃது எளிதில் தேய்வதில்லை. எனவே நகத்தை நாம் அடிக்கடி வெட்டிவிடுதல் நல்லது. ஏனெனில் நகத்தின் அடியில் சேரும் அழுக்கு உணவு உண்ணும்போது உணவோடு கலந்து உட்சென்று தீங்கிழைக்கும். அழகுக்காக சிலர் நகங்களை நீளமாக வளர்த்து வண்ணந் தீட்டி வனப்பூட்டுவர்.

நம்மைப் போலவே பறவைகளுக்கும் பிற விலங்குகளுக்கும் நகங்கள் உண்டு. இவை நம் நகங்களை விட கூர்மையாக இருக்கும். சற்று வளைந்திருக்கும், பூனை, புலி, சிங்கம்போன்ற விலங்குகள் நகங்களை வேண்டியபோது பாதத்தின் உட்புறமாக இழுத்துக்கொள்ள இயலும். தேவையானபோது வெளியே நீட்டி இரையை இறுகப் பிடிப்பதற்கும் தாக்கித் தன்னைக் காத்துக் கொள்ளவும் செய்யவும்.

மாடு, குதிரையின் நகங்கள் குளம்பு வடிவில் இருக்கும். இவை ஓடும்போது குளம்பு தேயாமலிருக்க இவற்றை 'லாடம்’ எனும் இரும்பு வளையத்தை ஆணி கொண்டு அடித்துப் பயன்படுத்துவர். யானையின் நகங்கள் மிகப் பெரிதாகக் காலில் அமைந்திருக்கும்.