இளையர் அறிவியல் களஞ்சியம்/நிக்கல்

விக்கிமூலம் இலிருந்து

நிக்கல் : இது ஒரு தனிமம் ஆகும். இத் தனிமம் தனியாகக் கிடைப்பதில்லை. பிற தனிமங்களோடு சேர்ந்த கலவையாகவே கிடைக்கிறது. அதிலிருந்து நிக்கல் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது. நிக்கல் உலகிலேயே அதிக அளவில் கிடைக்கும் நாடு கனடாவாகும்.

நிக்கல் வெள்ளி போன்று நிறம் தரும் உலோகமாகும். மிகவும் கெட்டித்தன்மை கொண்ட இவ்வுலோகத்தை கம்பியாக நீட்டலாம் தகடாக அடிக்கலாம்.

நிக்கல், எதனாலும் அரிக்கப்படுவதில்லை. எனவே, பால்பண்ணை போன்றவிடங்களில் பயன்படுத்தும் பாத்திரங்கள் நிக்கலாலேயே செய்யப்படுகின்றன. எந்திர உறுப்புகளும் நிக்கலால் செய்யப்படுகின்றன. நிக்கல் எளிதில் காந்தத் தன்மை பெறும் இயல்புடையதாதலின் காந்தத் தொழிலில் நிக்கல் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. நிக்கலோடு இன்வார் எனும் உலோகத்தைச் சேர்த்து புதுக்கலவை உலோகம் உருவாக்கப்படுகிறது. இக்கலவை உலோகம் வெப்பத்தால் விரிவடையும் தன்மை இல்லாதது. எனவே, கடிகாரத்துக்கு வேண்டிய உறுப்புகள் இக்கலவை உலோகத்தாலேயே செய்யப்படுகின்றன. இதேபோன்று நிக்கல் உலோகத்தோடு குரோமியத்தைக் கலந்து புதுக்கலப்பு உலோகம் தயாரிக்கப்படுகிறது. இக்கலப்பு உலோகம் ‘நைக்ரோம்' என அழைக்கப்படுகிறது. இஃது வெப்பத்தை அதிக அளவில் தாங்கும் தன்மை கொண்டதாகும். எனவே, மின் அடுப்பு போன்றவை தயாரிக்க இக்கலப்பு உலோகத்தையே அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். நிக்கலோடு செம்பைச் சேர்த்து உருவாக்கப்படும் 'மானல் உலோகம்' (Monal metal) எனும் கலப்பு உலோகத்தைக் கொண்டு நாணயங்கள் செய்யப்படுகின்றன. நிக்கலோடு செம்பையும் துத்தநாகத்தையும் கலந்து 'ஜெர்மன் வெள்ளி’ எனும் கலப்பு உலோகம் உருவாக்கப்பட்டுள்ளன. வெண்ணிற நகைகள், உயர்ந்த கரண்டிகள், கத்திகள் செய்யப் பயன்படுகிறது.

இஃது வெள்ளியால் செய்யப்பட்டது போன்ற தோற்றத்தை வழங்கும். நிக்கலின் துணைகொண்டு பல்வேறு வேதிப் பொருட்கள் உருவாக்கிப் பயன்படுத்தப்படுகின்றன.

தூளாக்கப்பட்ட நிக்கல் எண்ணெய்களை, வனஸ்பதி, டால்டா போன்றவைகளாக மாற்றும் வினையில், வினைவேக மாற்றியாகவும் பயன்படுகிறது.