உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/நிக்கோட்டின்

விக்கிமூலம் இலிருந்து

நிக்கோட்டின் : இது ஒருவகை நச்சுப் பொருளாகும். இஃது புகையிலையில் அதிகமாக உள்ளது. நிறமற்றது. எண்ணெய்போல் உள்ளதாகும். இது கார்பன், நைட்ரஜன், ஹைட்ரஜன் கலந்த கரிமச் சேர்மமாகும். காரச் சுவையும் கசப்பும் கலந்த இது நீரில் கரையும் தன்மை கொண்டதாகும். புதிதாகப் புகையிலையைச் சுவைத்தால் தலைசுற்றல் ஏற்படும். இதைப் புகையிலையாகச் சுவைக்கும்போதும் சுருட்டாக, சிகரெட்டாகப் புகைக்கும்போதும் நரம்புகளைத் தூண்டுகிறது. புகையிலைச் சாரை விழுங்குவதால் நாளடை வில் இரத்தக் குழாய்களும் சிறுகுடலும் சுருங்கி விடுகிறது. இதனால், இரத்தநாள குடல் நோய்கள் தோன்றுகின்றன. புற்று நோய்க்கு நிக்கோட்டினும் ஒரு காரணமாகும். நிக்கோட்டின் அதிகமுள்ள புகையிலையை பயன்படுத்தினால் பசி ஏற்படுவது குறையும். இதன்மூலம் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும்.

நிக்கோட்டின் சிறந்த பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுகிறது. எனவே, தாவரங்களைத் தாக்கும் பூச்சிகளை ஒழிக்க புகையிலைச் சாற்றைத் தெளிக்கிறார்கள். ஒருவரது உயிரைப் போக்க 40 கிராம் நிக்கோட்டின் போதும். புகையிலையை வாயில் வைத்துக் சுவைக்கும்போது அதிக அளவில் உமிழ்நீர் சுரக்கும். அதிக அளவில் வேர்ப்பதும் உண்டு. கூடியவரை நிக்கோட்டின் மிகுந்துள்ள புகையிலை போன்ற பொருட்களை உடலளவில் பயன்படுத்துவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.