இளையர் அறிவியல் களஞ்சியம்/நீராவி எஞ்சின் பொறி

விக்கிமூலம் இலிருந்து

நீராவி எஞ்சின் பொறி 'ஸ்டீம் எஞ்சின்' என்று வழங்கப்படும் நீராவி என்ஜின் நீராவியின் சக்தியைக் கொண்டு இயங்கும் பொறியாகும். இப்பொறி கண்டுபிடிக்கப்பட்ட பிறகே போக்குவரத்து வழிகள் விரைந்து பெருகின; பொருள் உற்பத்தி மிகுந்தன; இதனால்

1769இல் வாட் அமைத்த நீராவிப் பொறி

வாணிகம் தழைத்தது. சுருங்கச் சொன்னால் தொழிற்புரட்சிக்கு வேகமும் விறுவிறுப்பும் ஊட்டியவற்றுள் தலையாய சிறப்பு இப்பொறிக்குரியதாகும்.

நிலக்கரியை எரிப்பதன் மூலம் அதனுள் அடங்கிக் கிடந்த சக்தி அனல் சக்தியாக வெளிப்படுகிறது. அதைக் கொண்டு நீரைக்கொதிக்கச் செய்யும்போது நீராவிச் சக்தி வெளிப்படுகிறது. நீரிலும் நீராவிச் சக்தி அதிக இடத்தை அடைத்துக் கொள்ளும். இதனால் நீராவி சக்தி மிக்கதாகிவிடுகிறது. இந்த அடிப்படையிலேயே நீராவிப் பொறி அமைந்துள்ளது.

நீராவியால் இயங்கும் ரயில் என்ஜின் எவ்வாறு இயங்குகிறது என்றும் பார்ப்போம்: நீராவிப் பொறியின் கீழ்ப்பகுதியில் நிலக்கரி எரிக்கப்படுவதால் உண்டாகும் அனலால் மேற்பகுதியில் உள்ள கொதிகலத்தில் உள்ள நீர் நீராவியாகிறது. இந்நீராவி பின்னர் நீராவிக் குழாய் மூலம் சிலிண்டர் எனும் பகுதிக்கு அனுப்பப்படுகிறது. அதிக அழுத்த சக்தி கொண்ட நீராவி பிஸ்டனைத் தள்ளுகிறது. பிஸ்டன் ஒரு திசை நோக்கி நகரும் போது அடுத்துள்ள நழுவு வால்வு எதிர்த்திசையில் நகருகிறது. சிலிண்டருள் நீராவி இரு வழிகளில் உட்செல்லுகிறது. நழுவு வால்வு இவற்றின் ஏதேனும் ஒரு வழியில் மட்டுமே சிலிண்டருள் நீராவியைப் புகவிடும். பிஸ்டனும் நழுவு வால்வும் எதிரெதிராக மாறி மாறி இயங்கி உட்புகும். நீராவியை எந்திர சக்தியாக மாற்றுகிறது. இதற்குப் பயன்பட்ட நீராவி மற்றொரு வழியே வெளியேறுகிறது.

ஜேம்ஸ் வாட்

பிஸ்டன் முன்னும் பின்னுமாக நகருவதால் அதனோடு இணைக்கப்பட்டுள்ள சக்கரம் தொடர்ந்து சுழல ரயில்வண்டி ஓடுகிறது. இதே முறையில் பல்வேறு வகையான நீராவிப் பொறிகளும் இயக்கப்படுகின்றன.

எனினும், இன்று மின்சாரத்தின் பயன்பாட்டால் எல்லா நிலைகளிலும் எந்திரங்களை இயக்குவது எளிதாகியுள்ளது. இதனால் நீராவிப் பொறிகளைப் பயன்படுத்தும் போக்குப் பெரிதும் குறைந்து கொண்டு வருகிறது. என்றாலும்கூட நீராவிப் பொறிகள் மின் உற்பத்திக்குத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டே வருகிறது. பெரும் கப்பல்களை இயக்கவும் நீராவிப் பொறிகளே ஏற்ற வகைகளாக உள்ளன .

நீராவிப் பொறியைக் கண்டுபிடிக்கும் முயற்சி 1600-லேயே தொடங்கப்பட்ட போதிலும் அதனை முழுமையாக 1768இல் வடிவமைத்த பெருமை ஜேம்ஸ் வாட் எனும் விஞ்ஞானியையே சாரும்.