இளையர் அறிவியல் களஞ்சியம்/பாரஃபின்

விக்கிமூலம் இலிருந்து

பாரஃபின் : பெட்ரோலியத்தைக் காய்ச்சி வடிப்பதன் மூலம் இஃது பெறப்படுகிறது. இது ஒருவகை மெழுகு ஆகும். பொதுவாக பாரஃபின்கள் கார்பனும், ஹைட்ரஜனும் சேர்ந்த ஹைட்ரோ கார்பன்கள் என்னும் கரிமச் சேர்ம வகையைச் சார்ந்ததாகும். பொதுவாக வினை யற்ற தன்மையை கொண்டிருக்கும். எனவேதான் லத்தீன் மொழியில் பாரம் (Patum) எனில் சிறிது, அபின் (Affin) எனில் கவர்ச்சி என்ற சொற்களில் இருந்து அழைக்கலாயிற்று. கார்பனும் பிறிதொரு கார்பன் இணைந்து சங்கிலித் தொடராகவும், வளையச் சேர்மமாகவும் தருவதால் இருவகை பாரஃபின்கள் உண்டு. கார்பனின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க வாயு நிலைமையிலிருந்து படிப்படியாக நீர்ம, திரவ பாரஃபின்கள் உருவாகின்றன.

பாரஃபின் வாயு, திரவம் மற்றும் திடவடிவங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் திரவநிலையில் உள்ள பாரஃபின் மட்டுமே பெட்ரோலிய மணத்துடன் இருக்கும். மற்றைய வகை பாரஃபின்களுக்கு மனமேதும் இல்லை. சாதாரணமாக பாரஃபின்கள் நீரில் கரைவதில்லை. திரவ மற்றும் வாயு பாரஃபின்கள் ஆல்கஹாலிலும் ஈதரிலும் எளிதாகக்கரைகின்றன.

இம் மெழுகைக் கொண்டு மெழுகுவத்திகள் செய்யப்படுகின்றன. தீக்குச்சிகள் தயாரிப்பதற்கும் மெழுகுத்தாள் செய்வதற்கும் பாரஃபின் மெழுகு பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. கலிக்கோ போன்ற சில வகைத் துணிகளுக்கும் பாரஃபின் மெழுகு மெருகுபோடப் பயன்படுத்தப்படுகிறது. மின் கருவிகளில் கம்பிச் சுருள்களில் மேல்பூச்சாகப் பூசப்படுகிறது. இசைத் தட்டு, கரித்தாள் (Carbon paper) அச்சு மை போன்றவற்றிலும் பாரஃபின் மெழுகு பயன்படுத்தப்படுகிறது. நீர்க்காப்பு (Water proof)ப் பொருளாகவும் அமைந்து பயன்படுகிறது.

மருத்துவத் துறையில் மருந்துப் பொருளாகவும் பாரஃபின் பயன்படுகிறது.