இளையர் அறிவியல் களஞ்சியம்/பாரமானி

விக்கிமூலம் இலிருந்து

பாரமானி : இது ஆங்கிலத்தில் பாரோமீட்டர் (Barometer) என்று அழைக்கப்படுகிறது. இது காற்றின் அழுத்த அளவைக் கணக்கிட்டுக் காட்டும் கருவியாகும்.

காற்றுக்கு எடை உண்டு என்பதை டாரி செல்லி எனும் இத்தாலிய விஞ்ஞானி 1648இல் கண்டறிந்தார். அதன் விளைவாக உருவாக்கப்பட்ட கருவியே பாரமானி.

எடையுள்ள காற்றானது பொருள்களை அழுத்துகிறது, இந்த அழுத்தத்தின் அளவை அளப்பதற்கான கருவியே பாரமானி. இதை அறிவதற்கான எளிய சோதனை முறை ஒன்று உண்டு. பாதரசம் நிரப்பப்பட்ட சிறு குழாயின் ஒரு முனையை கட்டை விரலால் மூடிக்கொண்டு அக்குழாயைத் தலைகீழாக பாதரசக் கிண்ணத்தில் வைக்க வேண்டும். அப்போது அக்குழாயில் உள்ள பாதரசம் சிறிதளவு இறங்கி பின் அப்படியே நின்றுவிடும். குழாயிலுள்ள பாதரசம் வெளியேறிவிடாது. வெளிக்காற்றின் அழுத்தமே குழாயிலுள்ள பாதரசத்தை முற்றாகக் கீழே இறங்காமல் தடுக்கிறது. மேற்பகுதியில் பாதரசம் இறங்கியதால் உண்டான காலியிடத்தின் உயரத்தை அல்லது பாதரசத்தின் உயரத்தைக் கொண்டு காற்றின் அழுத்தத்தைக் கணக்கிடுவர். இந்த உயரம் கால நிலைக்கும் உயரத்திற்கேற்ப குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும்.

பாரமானியில் பாதரசத்தைப் பயன்படுத்துவதற்குக் காரணம் மற்ற திரவங்களைவிட பாதரசம் அடர்த்தி மிக்கதாக இருப்பதேயாகும். சாதாரண வெப்பநிலையில் பாதரச ஆவி அழுத்தம் குறைவாக இருப்பது மற்றொரு காரணமாகும்.

வறட்சியான காற்றிற்கு அழுத்த சக்தி அதிகம் உண்டு. நீராவி நிறைந்த ஈரக்காற்றிற்கு அழுத்தம் குறைவாகும். எனவே, பாரமானியில் பாதரச ஏற்ற இறக்க அளவுகள் காற்றின் ஈரத்தன்மையையும் வறட்சித் தன்மையையும் அளவிட்டுக் காட்டிவிடும். பாதரசத்தின் உயரம் குறைவாக இருப்பின் அது ஈரக்காற்றின் விளைவாக ஏற்படப் போகும் மழைக்கான அறிகுறியை முன்னறிவிப்பதாகும். பாதரசத்தின் உயரம் திடீரெனக் குறைந்தால் அது புயலுக்கான அறிகுறியாகக் கொள்ளப்படும்.

கடல் மட்டத்திலிருந்து உயரச் செல்லச் செல்ல காற்றின் அழுத்தம் சீராகக் குறைந்து கொண்டே செல்லும். 12 சென்டிமீட்டருக்கு ஒரு சென்டிமீட்டர் வீதம் பாரமானியின் பாதரச உயரம் குறையும். இதன் மூலம் மலைகளின்

பாரமானியின் உட்புற அமைப்பு

உயரத்தை கண்டறிய முடியும். அதே போன்று பூமிக்குக் கீழே ஆழத்தில் செல்லும் போதும் இதே விகிதத்தில் பாரமானியின் பாதரச உயரம் அதிகமாகும். இதிலிருந்து சுரங்கத்தின் ஆழத்தை அளந்தறிய முடியும்.

விமானிகள் காற்றின் அழுத்தத்தையும் தாங்கள் பறக்கும் உயரத்தையும் கணக்கிட்டறிய அல்டிமீட்டர்’ எனும் உயரமானியைப் பயன்படுத்துகின்றனர்.

எளிதாகச் செல்லுமிடமெல்லாம் எடுத்துச் செல்ல வசதியாகத் திரவமற்ற பாரமானியாகிய ‘அனிராய்டு பாரமானி’ எனும் கருவியை எடுத்துச் செல்கின்றனர். இது ஒரு சிறு பெட்டி வடிவிலிருக்கும். இதில் உள்ள காற்று வெளியேற்றப்பட்டு வெற்றிடமாக்கப்பட்டிருக்கும். காற்றின் அழுத்தத்தன்மைகளுக்கேற்ப அசையக்கூடிய முள் ஒன்று அதில் பொருத்தப்பட்டிருக்கும். இம்முள்ளின் அசைவுக் கேற்ப காற்றின் அழுத்த அளவைக் கண்டறியலாம். இதற்கு ஏதுவாக முள்ளின் துணியில் பொருத்தப்பட்டு எழுதுகோல் அங்குள்ள உருளைத் தாளின் மீது காற்று அழுத்த ஏற்ற இறக்கங்களை பதிந்து காட்டும். இப்பதிவு 'பார ரேகை' (Borograph) என்று அழைக்கப்படுகிறது.

சோதனைச் சாலைகளின் காற்றின் அழுத்தத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சோதனைகளைச் செய்யவும் வானிலை ஆராய்ச்சி நிலையத்தினர் வானிலைகளை முன்னறிந்து கூறுவதற்கும் பாரமானிகள் பெரிதும் பயன்பட்டு வருகின்றன.