இளையர் அறிவியல் களஞ்சியம்/பாறை

விக்கிமூலம் இலிருந்து

பாறை : நாம் எத்தனையோ வகையான பாறைகளைப் பார்க்கிறோம். ஒவ்வொன்றும் ஒரு வடிவில் அமைந்துள்ளன. வெவ்வேறு வண்ணங்களில் காணப்படுகின்றன. சில கரடு முரடாக உள்ளன. இன்னும் சில வழவழப்பாகவும்கண்கவர் தோற்றமுடையதாகவும் திகழ்கின்றன.

அழகான பாறைகள் ஒன்று - அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கனிமங்களால் ஆனதாகும். இப் பாறைகள் எழில்மிகு தோற்றத்தையும் வண்ணத்தையும் கொண்டிருக்கின்றன. வைரங்களைப் போன்று பளபளப்புடன் மின்னும் பாறைகளும் உண்டு.

ஆனால், எல்லாப்பாறைகளும் இவ்வாறே அமைவன அல்ல.சில வகைப் பாறைகள் வண்டல் மண் கெட்டியாகி உருவானவை. இவை வண்டல் பாறைகள் (Sedimentary rocks) என்றே அழைக்கப்படுகின்றன. மணல் பாறைகளும், சுண்ணாம்புப் பாறைகளும் இதற்கு ஏற்ற எடுத்துக்காட்டுகளாகும்.

மற்றொரு வகைப் பாறை பூமிக்கடியிலிருந்து உருகி வெளிப்பட்டு இறுக்கமடைந்த பாறைகளாகும். இவை எரிமலைப் பாறைகள் (Igneous rocks) என அழைக்கப்படுகின்றன.

எரிமலைப் பாறை

கருங்கல் பாறைகளும் (Granite rocks) தீக்கல் (Basalt rocks) பாறைகளும் இதற்குரிய எடுத்துக்காட்டுகளாகும். எரிமலைப் பாறையிலான, திண்ணிய பசுமை நிறமுடைய இப்பாறைகள் சாலைப் படுகைகள், சாலை இரும்புப் பாதையின் அடிப்பரப்பு உடைகல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. கட்டிடங்கள் கட்டுவதற்கும் இத்தகைய பாறைக்கற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மூன்றாவது வகைப் பாறை முன்பு ஒரு நிலையிலிருந்து வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் இன்று வேறொரு நிலைக்கு மாற்றப்பட்ட (Metamorphic)வையாகும். இதற்குச் சலவைக் கல்லும் படிகக் கல்லும் தக்க உதாரணங்களாகும்.

சில பாறைகள் உலோகக் கனிமச் சேர்க்கையோடு கூடியவைகளாக இருக்கும். இப்பாறைகளிலிருந்து உலோகக் கனிமங்களைத் தனியே பிரித்தெடுப்பர். தங்கம் இவ்வாறுதான் பாறையிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.