உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/பாஸ்டர், லூயி

விக்கிமூலம் இலிருந்து

பாஸ்டர், லூயி : புகழ்பெற்ற ஃபிரெஞ்சு வேதியியல் அறிஞரும் உயிரியல் விஞ்ஞானியுமான லூயி பாஸ்டர் மருத்துவ வரலாற்றில் தனிச்சாதனை புரிந்தவராவார். நோய்நுண்மக் கோட்பாடுகளை வரன்முறையாக, காரண காரியங்களுடன் வகுத்தவர். ஊசி குத்தி மருந்தேற்றி நோய்த் தடுப்பு மருத்துவம் செய்வதை முதன் முதலாகக் கண்டுபிடித்த சிறப்புக்குரியவராவார்.

லூயிபாஸ்டர்

இவர் ஃபிரான்ஸ் நாட்டிலுள்ள டோல் எனும் ஊரில் 1822ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் தந்தை தோல் பதனிடும் தொழிலாளி ஆவார். பாஸ்டருக்கு இளமையிலேயே அறிவியல் பாடங்களில் அதிகம் ஆர்வமுண்டு. கல்லூரியில் கணிதமும் பிற விஞ்ஞானப் பாடங்களையும் படித்து முடித்தார். பின் ஆசிரியப் பயிற்சியும் பெற்றார். லில் பல்கலைக்கழகத்தில்

சோதனைச் சாலையில் லூயிபாஸ்டர்

அறிவியல் துறைத் தலைவரானார். இவர் தமது இருபத்தைந்தாவது வயதில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றார். தமது இருபத்தியாறாம் வயதில் புளியகக் காடி (Tartartic acid) பற்றிய இவரது ஆய்வு இவரை ஓர் சிறந்த வேதியியல் அறிஞர் என உலகுக்கு இனங்காட்டியது.

இவர் நொதித்தல் (Fermentation) பற்றிய புதிய நோக்கில் ஆய்வு செய்தார். அக்காலத்தில் தயாரிக்கப்பட்ட ஒயின் எனும் மது சிறிது காலம் வைத்திருந்தால் ஒருவித துர்நாற்றமுடையதாகக் கெட்டு வந்தது. இதற்கான காரணம் தெரியாமல் இருந்தது. இவர் முனைப்பான ஆய்வு செய்து ஒருவகை நுண்ணுயிர் திராட்சைச் சாற்றை புளிக்கச் செய்து மதுவாக மாற்றுகிறது என்றும், மற்றொரு வகை நுண்ணுயிர் வெறுப்பூட்டும் பொருட்கள் சிலவற்றை உண்டாக்கி அம் மதுவை துர்நாற்றமுடையதாக ஆக்குகிறது என்றும் கண்டறிந்தார். ஒரு வெப்ப நிலையில் அம் மதுவை வைத்திருந்தால் அது கெடாது என்பதையும் கண்டறிந்து கூறினார். இந்தக் கண்டு பிடிப்பு உயிரியல் ஆய்வின் திருப்பு முனையாக அமைந்தது. இந்த ஆய்வின் அடிப்படையிலேயே காய்ந்த பாலைக் கெடாமல் பாதுகாக்கும் 'பாஸ்டர் முறை' தோன்றியது.

நோய்களை நுண்மங்களே உண்டாக்குகின்றன என்பதை லூயி பாஸ்டர் நன்கறிந்தார். இந்நுண்மங்கள் உடலுள் செல்லாதவாறு தடுத்துவிட்டால் நோய் வராமல் தடுக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார். எனவே, நோய் நுண்மங்களை அழிக்கும் வழிமுறைகளைப் பற்றி பெரிதும் சிந்திக்கலானார், மருத்துவர்கள் இத்துறையில் முனைப்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமெனத் தூண்டினார். அத்தூண்டுதலின் விளைவாகவே ஜோசப் லிஸ்டர் என்பவரால் அறுவை சிகிச்சையின்போது கடைப்பிடிக்க வேண்டிய நோய் நுண்மத் தடுப்பு முறைகளைக் கண்டறிய முடிந்தது.

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் (Bacteria) உண்ணும் உணவுப் பொருட்கள் மூலமும் குடிக்கும் பால்போன்ற பானங்கள் மூலமும் கலந்து உடலுக்குள் செல்கின்றன. இவற்றை உடலுள் செல்லும் முன்பே அழிக்கும் வழிமுறை பற்றியும் ஆராய்ந்தார். இறுதியில் பால் போன்றவற்றை நன்கு சூடாக்குவதன் மூலம் இந்நோய் நுண்மங்களை அழிக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார்.

கரணை (Anthra) எனும் கொடிய நோய் மனிதர்களையும் கால்நடைகளையும் பிற விலங்குகளையும் பிடித்து வந்தது. இதனால் பெருமளவில் உயிர் இழப்பு ஏற்பட்டு வந்தது. இக்கொடிய நோய் பற்றிய ஆய்வில் முனைப்புடன் ஈடுபட்டார். இந்நோய்க்கு மூல காரணம் ஒரு குறிப்பிட்ட வகை நுண்ணுயிர்களே என்பதைக் கண்டறிந்தார். இதைச் சோதனை மூலம் மெய்ப்பித்தார். தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கரணை நோயைத் தோற்றுவிக்கும் நுண்ணுயிர் போன்ற, ஆனால் ஆற்றல் குறைந்த மற்றொரு நுண்ணுயிர் வகையை உருவாக்கும் வழிமுறையைக் கண்டுபிடித்தார். இதை ஊசி மூலம் கால்நடையின் உடலுள் செலுத்தினார். இவற்றிற்கு கடுமையற்ற கரணை நோய் தோன்றுகிறது. இதை கால்நடைகளால் எளிதில் தாங்கிக் கொள்ள முடிந்தது. உயிர்க்கு எந்த ஆபத்தும் ஏற்பட வில்லை. அத்தோடு இத்தகைய நோயைத் தாங்குவதோடு, எதிர்க்கும் நோயெதிர்ப்புத் தன்மையை கால்நடைகள் பெறலாயின. இதன் பின்னர் கரணை நோய் போன்றவைகள் ஏற்படாமல் தடுக்கும் நிலைஉருவாகியது.

பாஸ்டரின் மற்றொரு அரிய கண்டுபிடிப்பு 'ராபீஸ்’ எனும் வெறிநாய்க் கடி நோய்க்கு எதிரான ஊசிமூலம் செலுத்தும் மருந்தைக் கண்டுபிடித்ததாகும். 'சிக்கன் காலரா' எனும் கொடிய வாந்திபேதி நோயைத் தடுக்கும் அம்மைப்பால் மருந்தைக் கண்டுபிடித்தது மற்றொரு அருஞ்சாதனையாகும். இவர் 1899இல் பாரிஸ் அருகே காலமானார்.