இளையர் அறிவியல் களஞ்சியம்/பாஸ்வரம்

விக்கிமூலம் இலிருந்து

பாஸ்வரம் : தானாகத் தீப்பிடித்துக் கொள்ளும் தன்மை கொண்ட பாஸ்வரம் ஒரு தனிமம் ஆகும். இதில் இரு வகைகள் உள்ளன. ஒன்று மஞ்சள் பாஸ்வரம்; மற்றொன்று சிவப்புப் பாஸ்வரம். 1669இல் பிராண்ட் என்பாரால் அறியப்பட்டு 1777இல் லவாசிசியர் என்பாரால் இதன் தனித்தன்மை உறுதி செய்யப்பட்டது. இருட்டில் ஒளியோடு இருந்தமையால் இதற்கு ஒளி தரும் பாஸ்வரம் என்ற பெயர் இடப்பெற்றது. உயிர் வாழ்க்கைக்கு பாஸ்வரம் இன்றியமையாத ஒன்றாகும். நைட்ரஜன் சுழற்சியைப் போல் பாஸ்வர சுழற்சியும் முக்கியமான ஒன்றாகும். இயற்கையில் இந்த பாஸ்வர சுழற்சியால் உயிர் வாழ்க்கைக்கு தேவையான பாஸ்வரம் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. பாஸ்வரம் தனித்துக் கிடைப்பதில்லை. பிற உலோகங்களோடு சேர்ந்த கூட்டுக் கலவைப் பொருளாகவே கிடைக்கிறது. இதைத் தனியாகப் பிரித்தெடுத்துப் பயன்படுத்துகிறார்கள்

மஞ்சள் பாஸ்வரம் காற்றுப்பட்டவுடன் எரியும் தன்மை கொண்டது. இதனால் அதை எப்போதும் தண்ணீருக்கடியிலேயேவைத்திருப்பர். இதை மிகு வெப்பத்தில் சூடேற்றி சிவப்புப் பாஸ்வரம் தயாரிக்கிறார்கள். இது தூளாகக் கிடைக்கிறது. சிவப்புப் பாஸ்வரம் காற்றில் தீப்பிடித்து எரிவதில்லை. மஞ்சள் பாஸ்வரம் போன்று இது தீங்கு விளைவிப்பதில்லை. தீப்பெட்டியின் இருபுறமும் சிவப்புப் பாஸ்வரக் கலவையே பூசப்படுகிறது.

போரின்போது பயன்படுத்தக்கூடிய கொடிய நெருப்புக் குண்டுகள் பாஸ்வரத்தைக் கொண்டே தயாரிக்கப்படுகிறது.

பாஸ்வரச் சத்து எலும்பு, நரம்பு, பல் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். இச்சத்து மீன், இறைச்சி, முட்டை போன்றவற்றில் அதிகமிருப்பதால் இவற்றை அதிகம் உண்ண வேண்டும். தாவரங்களின் செழுமையான வளர்ச்சிக்கும் பாஸ்வரச் சத்துக் கலந்த உரங்களை பயிர்களுக்குப் போட்டு நல்ல விளைச்சலைப் பெறுகிறார்கள்.

பாஸ்வரம் அதிகம் கிடைக்கும் நாடுகளுள் கனடா குறிப்பிடத்தகுந்த முக்கிய நாடாகும்.