இளையர் அறிவியல் களஞ்சியம்/புரோட்டோசோவா

விக்கிமூலம் இலிருந்து

புரோட்டோசோவா : மைக்ரஸ்கோப் எனும் உருப் பெருக்காடி மூலம் மட்டுமே காணக்கூடிய மிக நுண்ணிய உயிரினமாகும். இது ஒரு ஓரணு உயிராகும். குளம் அல்லது குட்டையிலிருந்து எடுக்கப்படும் ஒரு கரண்டி நீரில் பல இலட்சக்கணக்கான புரோட்டோசோவாக்கள் உள்ளன.

புரோட்டோசோவாக்கள் பெரும்பாலும் நீரிலும் ஈரமான இடங்களிலுமே வாழ்கின்றன. இஃது ஒரணு உயிரினமாயினும் மற்ற பிராணிகளைப் போன்றே இவைகளும் வேண்டிய உணவைத் தேடிப் பெறுகின்றன. உண்ணும் உணவை சீரணிக்கின்றன. மற்ற உயிரினங்களைப் போன்றே இவைகளும் சுவாசித்தே வாழ்கின்றன. உண்ட உணவிலிருந்து வெளிப்படும் கழிவுப் பொருட்களை அவ்வப்போது வெளியேற்றுகின்றன. இனப்பெருக்கமும் செய்து கொள்கின்றன.

புரோட்டோசோவாக்கள் மிக நுண்ணிய உயிரினமாக இருந்த போதிலும் இவற்றில் சிலவற்றிற்கு உடல்மேல் ஓடு உண்டு. இவை இறப்பதால் தங்கும் இலட்சக்கணக்கான இவ்வோடுகள் ஒன்று சேர்ந்ததே கடலடியில் உருவாகும் சீமைச் சுண்ணாம்புத் திட்டுகள்.

புரோட்டோசோவாக்களின் இனப்பெருக்கம் விந்தையானதாகும். ஒவ்வொன்றும் ஒன்று. அல்லது இரண்டாகப் பிரியும். பிரியும் ஒவ்வொரு பகுதியும் ஒரு புரோட்டோசோவாவாக விரைந்து மாறி வளரும். இவ்வாறுதான் இவற்றின் இனப்பெருக்கம் நிகழ்கிறது.

புரோட்டோசோவாக்கள் அனைத்தும் ஒரே வகையானவை அன்று. அவை பலவகைப்படும். உலகில் சுமார் இருபத்தையாயிரம் வகை புரோட்டோசோவாக்களுக்கு மேல் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இவற்றுள் சில சுயேட்சையான வாழ்க்கைமுறையைக் கொண்டுள்ளன. இன்னும் சிலவகைகள் மற்ற பிராணிகளோடு ஒட்டிக்கொண்டு ஒட்டுண்ணிபாக வாழ்க்கை நடத்துகின்றன. தங்களுக்கு வேண்டிய உணவை தாங்கள் ஒட்டிக் கொண்டிருக்கும் பிராணிகளிடமிருந்தே உறிஞ்சிப் பெறுகின்றன.

புரோட்டாசாவா வகைகள் புரோட்டோசோவாக்களில் மிக முக்கியமானவைகளாக (இதில் காணப்படும்) பன்னிரண்டு வகைகள் இனங் காணப்பட்டுள்ளன.

புரோட்டோசோவாக்களிலேயே குறிப்பிடத்தக்க இரு வகைகள் அமீபாவும் பாரமீசியமும் ஆகும். அமீபாவின் உருவமைப்பு அடிக்கடி மாறும் இயல்புடையது. ஆனால், மயிரிழை போன்ற பாரமீசியம் மீனைப் போன்று நீரில் விரைந்து நீந்தும் தன்மையுள்ளது.

புரோட்டோசோவாக்களை விஞ்ஞானிகள் இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். ஒரு பிரிவு 'ரிஸோபோடா' என்றும் மற்றொரு பிரிவு 'இன்ஃபுசோரியா’ என்றும் அழைக்கப்படுகிறது. ரிஸோபோடாவுக்கு பொய்க்கால்கள் உண்டு. இவை எப்பக்கமும் நீளும். உடலுக்குள் இழுத்துக் கொள்ளவும் இயலும். இவற்றிற்குக் கவசம் போல கூடு உண்டு.

'இன்ஃபுசேர்ரியா' பிரிவு மிகவும் சிக்கலான அமைப்புடையதாகும். இவற்றிற்கு நுண்மயிர்கள் உண்டு. இவை நீரில் நகரும்போது இம்மயிர்கள் துடுப்புபோல் பயன்படுகின்றன.

கொசுவிலிருந்து இரத்தத்திற்கும் இரத்தத்திலிருந்து கொசுவிற்கும் பரவும் மலேரியா நோய் ஒட்டுண்ணிகள்.

சில புரோட்டோசோவாக்கள் ஒட்டுண்ணியாக மனிதர்களிடமும் விலங்குகளிடமும் வாழ்கின்றன. சில புரோட்டோசோவாக்கள் பிராணிகள் சிலவற்றிற்கு உணவாவதும் உண்டு. பெரும்பாலான புரோட்டோசோவாக்களால் மனிதனுக்கும் மற்ற விலங்குகளுக்கும் தீங்கே விளைகின்றன. மனிதர்களுக்கு மலேரியா நோயையும் உறக்கநோய் (Sleeping sickness) போன்ற கொடு நோய்களையும் புரோட்டோசோவாக்களே தோற்றுவிக்கின்றன. ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும் பிற விலங்குகளுக்குக்கூட சிலவகை நோய்களை புரோட்டோசோவாக்கள் தோற்றுவிக்கின்றன.