இளையர் அறிவியல் களஞ்சியம்/புரோட்டோபிளாசம்

விக்கிமூலம் இலிருந்து

புரோட்டோபிளாசம் : இது தமிழில் 'உயிர்ச் சத்து' அல்லது ‘உயிர்ப் பொருள்' என்று அழைக்கப்படுகிறது. புரோட்டோப்பிளாசமாகிய உயிர்ச் சத்தின் பல செய்திகள் இன்னும் மர்மமாகவே உள்ளன. இதை உயிரூட்டமுடன் இருக்கச் செய்வது எது என்பது இன்னும் முழுமையாக அறியப்படாமலேயே உள்ளது.

மிருகங்கள், தாவரங்கள் ஆகியவற்றின் உயிர்ப் பகுதியாக புரோட்டோபிளாசம் உள்ளது. உயிரினங்கள். தாவரம் அல்லது மிருகங்கள் அனைத்தும் 'செல்’ எனப்படும் உயிரணுக்களாலானவையேயாகும். மனித உடலில் பல கோடி உயிரணுக்கள் உள்ளன.

உயிரணு ஒவ்வொன்றும் சவ்வு போன்ற வழவழப்பான பொருளால் மூடப்பட்டுள்ளன. இந்த உறைக்குள்தான் புரோட்டோபிளாசம் எனும் உயிர்ப்பொருள் உள்ளது. இஃது இல்லாமல் எந்த உயிரணுவும் உயிர்வாழ முடியாது. கூழ் போன்ற இந்த உயிர்ப்பொருளுக்கு நிறமேதும் இல்லை. இது பிற உயிர்கள் போன்ற உணவை உட்கொள்கிறது. பிராண வாயுவைச் சுவாசிக்கிறது. இது தன் கழிவுப் பொருட்களையும் வெளியேற்றுகிறது.

புரோட்டோபிளாசம் இரு முக்கியப் பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது. இதன் மையப்பகுதியில் சற்றுக் கெட்டியாக அமைந்துள்ள உட்கரு ஒன்று உண்டு. இவ்வுட்கருவைச் சுற்றிலும் நீர்மப்பொருள் இருக்கிறது. அது 'சைட்டோப்பிளாசம்’ என அழைக்கப்படுகிறது. இவ்விரு பகுதிகளையும் தன்னுட்கொண்ட புரோட்டோபிளாசமாகிய உயிர்ப் பொருள், பல்வேறு வேதிப் பொருட்களைக் (Chemicals) கொண்ட கூட்டுக் கலவையாகும்.

ஒவ்வொரு உயிரினமும் அவற்றிற்கென ஒவ்வொரு வகைப் புரோட்டோபிளாசத்தைப் பெற்றுள்ளன. ஒவ்வொரு உயிரணுவும் தனக்குகந்த தனி வகையான புரோட்டோபிளாசத்தைப் பெற்றுள்ளன. எனவே, புரோட்டோ பிளாசம் ஒவ்வொன்றும் தன்னளவில் வேறுபட்டவையாகும். ஒவ்வொரு புரோட்டோ பிளாசமும் 99 சதவிகித அளவுக்கு நீர்,கார்பன், ஹைட்ரஜன் ஆக்சிஜன்,நைட்ரஜன் கலந்த புரதப் பொருட்களையும் மாவுப்பொருள் மற்றும் சர்க்கரை போன்ற கார்போ ஹைட்ரேட்களையும் கொண்டுள்ளன. கொழுப்புப் பொருட்களும் உப்பு வகைகளும் கூட புரோட்டோபிளாசத்தில் அடங்கியுள்ளன