இளையர் அறிவியல் களஞ்சியம்/பெஞ்சமின் ஃபிராங்க்ளின்

விக்கிமூலம் இலிருந்து

பெஞ்சமின் ஃபிராங்க்ளின் : புகழ்பெற்ற அமெரிக்க அறிவியல் அறிஞரும் புத்தமைப்பாளரும் எழுத்தாளருமாவார். இவர் பாஸ்ட்டன் நகரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். இரண்டாண்டுகள் மட்டுமே பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார். பின்னர், தந்தையின் மெழுகுவர்த்திக் கடையில் சிலகாலம் பணியாற்றினார். அவ்வேலை பிடிக்காமல் தன் அண்ணனின் அச்சகத்தில் பணிபுரிந்தார். அப்போது அச்சுத் தொழிலை நன்கு கற்றுத் தேறினார். அப்போது அவருக்குப் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் ஏற்பட்டது தானாக முயன்று கணிதம், தர்க்கவியல், இயற்கணிதம், வடிவ கணிதம் போன்றவற்றைக் கற்றுத் தேறினார்:

அறிவுக்கூர்மை மிக்கவரான இவர், பத்திரிகைக்கு எழுதும் வழக்கத்தை மேற்கொண்டார். இஃது அவர் அண்ணனுக்குப் பிடிக்காமற் போகவே தம் 17ஆம் வயதில் இவர் பிலடெல்பியாவுக்குச் சென்று மீண்டும் அச்சுத் தொழிலில் ஈடுபட்டார். இங்கிலாந்து சென்று அச்சுத் தொழிலில் மேலும் நுட்பங்களைக் கற்றுணர்ந்து, பிலடெல்பியா திரும்பி பென்சில்வேனியா கெசட் எனும் பத்திரிகையை வெளியிட்டார். பல புத்தகங்களை எழுதிய இவர் முதன்முறையாக நடமாடும் நூலகத்தை நிறுவினார். தீயணைப்புத்துறை போன்ற பொது அமைப்புகளை உருவாக்கினார். அமெரிக்காவிலேயே முதல் மருத்துவ விடுதியான பென்சில்வேனியா மருத்துவ விடுதியைத் தொடங்கினார். இவர் ஆரம்பித்த பென்சில் வேனியாக் கழகமே இன்று புகழ் பெற்று விளங்கும் பென்சில்வேனியாப் பல்கலைக் கழகமாகும்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் உருவாக உறுதுணையாயிருந்த இவர் மாபெரும் அரசியல் மேதையாக விளங்கியதோடு சிறந்த அறிவியல் அறிஞராகவும் புத்தமைப்பாளராகவும் விளங்கினார். மின்சக்தியால் உருவாவதே மின்னல் என்பதை முதன்முதல் கண்டறிந்து உலகுக்குக் கூறியவர் இவரே. இடி தாங்கியைக் கண்டு பிடித்தவரும் இவரே. இதைக் கொண்டு உயிர்களையும் பொருட்களையும் அழியாமல் காக்க வழியமைத்தார். மின்சாரம் பற்றிய பல உண்மைகளைக் கண்டறிந்து, அவற்றை நூல் வடிவில் வெளிப்படுத்தினார். ஸ்டவ் அடுப்பை முதன்முதலில் கண்டுபிடித்து வடிவமைத்தார். இரட்டைக் கண்ணாடி அமைப்புள்ள கண் கண்ணாடியை இவரே கண்டறிந்தார். இன்னும் எத்தனையோ விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்து உலகுக்குக் கூறிப் புகழ் பெற்றவர். இவர் தமது 85ஆம் வயதில் மறைவெய்தினார்.