இளையர் அறிவியல் களஞ்சியம்/பெட்ரோலியம்
பெட்ரோலியம் : பூமிக்கு அடியிலிருந்து கருவி மூலம் உறிஞ்சி எடுக்கப்படும் திரவ எரி பொருள் பெட்ரோலாகும். 'பெட்ரோலியம்’ எனும் சொல் 'பெட்ரோ ஒலியம்’ எனும் லத்தீன் சொல்லின் திரிபு ஆகும். இதற்குக் ‘கல் எண்ணெய்' (Rock oil) என்பது பொருளாகும்.
பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் ஏற்பட்ட நில நடுக்கத்தாலும் பூமி அதிர்வாலும் பூகம்பத்தாலும் மண்ணுள் புதையுண்டு போன உயிரினங்களும் தாவரப் பொருட்களும் மண் பாறை, சுண்ணாம்புப் பாறை போன்றவற்றின் இடுக்குகளுக்கிடையே சிக்கி, நீர்த்துப் போயின. நாளடைவில் இவை நிலத்தடி வெப்ப அழுத்தத்தின் காரணமாக திரவ வடிவில் பெட்ரோலியமாகவும் நிலத்தடி இயற்கை வாயுவாகவும் உருமாறின. நிலக்கரியும் இவ்வகையில் உருவானதே யாகும்.
இவை நிலத்துக்கடியில் எங்கே, எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறிய விஞ்ஞானிகள் புது வகைக் கருவிகளைக் கண்டுபிடித்துள்ளனர். அவற்றின் துணைகொண்டு பூமிக்கடியில் துளையிட்டு பெட்ரோலை வெளிக் கொணர்கின்றனர். இஃது பார்ப்பதற்கு மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாகத் தோன்றும். இதைக் கச்சா எண்ணெய் என்று அழைப்பர். இது இருபது அடி முதல் பத்தாயிரம் அடி ஆழம்வரை பூமிக்கடியில் ஆழத்தில் கிடைக்கிறது.
கச்சா எண்ணெய் அப்படியே பயன்படுத்தப்படுவதில்லை. அதைச் சுத்திகரிப்பாலைக்குக் கொண்டு சென்று சுத்திகரித்தே பயன்படுத்துகின்றனர். சுத்திகரிப்பின்போது கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், தார் பலவகைப் பொருள்கள் பெறப்படுகிறது. பெட்ரோலிலும் தூய்மை செய்யப்பட்ட எண்ணெய் விமான எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
பெட்ரோல் அதிக அளவில் கிடைக்கும் நாடுகளில் அரேபியா, ஃபிரான்ஸ், ஈராக், அரபு எமிரேட்ஸ், ரஷ்யா, காமன்வெல்த் நாடுகள் குறிப்பிடத்தக்கவைகளாகும். வளைகுடா நாட்டின் பகுதிகளிலும் இந்தியாவில் பம்பாய் கடற்பகுதிகளிலும் பெட்ரோலிய எண்ணெய் கிடைக்கிறது. இந்தியாவில் அஸ்ஸாம், குஜராத், ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரிப்படுகைகளிலும் காவேரிப் படுகைகளிலும் பெட்ரோல் கிடைக்கிறது. தொடர்ந்து பெட்ரோல் ஊற்றுக்களைக் கண்டறியவும் முயற்சி நடைபெற்று வருகிறது.
பெட்ரோலியத்தில் கணக்கற்ற கரிமச் சேர்மங்கள் அடங்கியுள்ளன. இவற்றினை ‘பின்னமாக்கி காய்ச்சி வடித்தல்’ (Fractional distillation) முறையில் பிரித்தெடுக்கின்றனர். இம் முறையில் கிடைக்கப் பெறும் பொருட்களாகிய, பாரபின், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், தார் மிகவும் பயனுள்ள பொருட்களாகும்.