இளையர் அறிவியல் களஞ்சியம்/பெரி - பெரி
பெரி - பெரி : உயிர்ச் சத்தாகிய வைட்டமின் ‘பி1’ (B1) குறைவால் உண்டாகும் ஒருவகை நோயாகும். உடலுக்குப் பலவீனத்தை உண்டாக்கும் இந்நோயாளியால் விரைந்து செயல்படவோ நடக்கவோ இயலாது. சோகை நோயும் பக்கவாத நோயும் தாக்க வாய்ப்பேற்படும். நாளடைவில் நரம்பு மண்டலப் பாதிப்பும் உண்டாகும்.
இந்நோய் அரிசி உணவை அதிகம் உண்ணும் மக்களையே பெரிதும் பீடிக்கிறது. காரணம், இயற்கையாக அரிசித் தோலில் வைட்டமின் ‘பி’ உயிர்ச் சத்து அமைந்துள்ளது. பச்சரிசி பெற வேண்டி நெல்லை வேகவைக்காமல் மில்லில் அரைக்கும்போது வைட்ட மின் 'பி’ முழுமையாக அரைபட்டு தவிட்டுடன் போய்விடுகிறது. இந்த அரிசியைத் தொடர்ந்து சமைத்து உண்பதால் வைட்டமின் 'பி' குறைவு ஏற்பட்டு பெரி-பெரி வருகிறது. நெல்லைப் புழுங்கவைத்துப் பெறும் புழுங்கல் அரிசியோ அன்றி கைக்குத்தல் அரிசியோ உண்போருக்கு இந்நோய் வருவதில்லை.
வைட்டபின் 'பி' குறைவால் பெல்லக்ரா எனும் நோயும் ஏற்படுவதுண்டு. இந்நோய் வந்தோருக்குப் பசிக்காது; நாக்கிலும் வாயிலும் புண் உண்டாகும். நீண்ட நேரம் வெயில் பட நேர்ந்தால் உடல் தோல் சிவப்பாகத் தோற்றமளிக்கும். குறிப்பாக இந்நோய் கண்டவரின் வாய் ஓரங்களில் வெடிப்பும் அதனால் புண்ணும் உண்டாகும்.
வைட்டமின் ‘பி’ குறைவால் இந்நோய்களின் பாதிப்புக்குள்ளானோர் வைட்டமின் ‘பி'யை ஊசிமூலம் செலுத்திக் கொண்டால் நோயினின்றும் விடுபடலாம்.