உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/பெரியம்மை

விக்கிமூலம் இலிருந்து

பெரியம்மை ; இதற்கு 'வைசூரி’ என்ற வேறொரு பெயரும் உண்டு. இது ஒரு கொடிய தொற்று நோயாகும். இந்நோயின் அறிகுறியாகக் காய்ச்சலும் அதைத் தொடர்ந்து முத்துக்கள் போன்ற நீர்க் கொப்புளங்களும் உடலெங்கும் தோன்றும். இந்நோய் இளையோர் முதல் முதியோர்வரை எல்லாப் பருவத்தினரையும் பீடிக்கும். நாடு, இன, நிற பேதமின்றி மனிதர்கள் யாரையும் இந்நோய் தாக்கும். அதிலும் வெப்ப மண்டல நாடுகளில் வாழும் மக்களை இந்நோய் பெரிதும் பீடிக்கிறது.

பெரியம்மைக் கொப்புளங்கள்

சாதாரணமாக அம்மைக் கிருமிகள் இரத்தத்தின் மூலம் விரைந்து உடலெங்கும் பரவுகின்றன. சில சமயம் இரத்தத்தின்மூலம் கருவிலிருக்கும் சிசுவையும்கூட தாக்குவதுண்டு. இந்நோய் ஒருவருக்கு வந்தவுடன் மற்றவர் களுக்கு விரைந்து பரவுகிறது. இந்நோயால், பாதிக்கப்பட்டவர்களின் உடல் கொப்புளத் தழும்புகளால் விகாரத் தோற்றத்தை அடைகிறது. கண் போன்ற பகுதிகளில் கொப்புளம் ஏற்படுவதால் பார்வை போய் குருடாக நேரிடுகிறது.

இந்நோய்க் கிருமிகள் நுண்பெருக்காடிமூலம் கூட காணமுடியாத அளவுக்கு மிக நுண்மையான 'வைரஸ்’ எனும் நச்சு நுண்ணுயிராகும். இந்நச்சுக் கிருமிகளை முதன்முதலில் கார்னெரி எனும் விஞ்ஞானிதான் கண்டுபிடித்தார்.

அம்மைக் கிருமிகள் சாதாரணமாகக் காற்றின் மூலமும் நோயாளியின் பொருட்கள் வாயிலாகவும் பிறருக்குத் தொற்றுகிறது. மூக்கின் அல்லது வாயின் வழியே உள் நுழையும் இந்நச்சுக் கிருமிகள் இதயத்தை அடைந்து, அங்கிருந்து இரத்தத்தில் கலந்து உடலெங்கும் பரவுகின்றன. அம்மைக் கிருமிகள்

அம்மை குத்தல்

உடலுள் புகுந்த பத்து அல்லது பதினான்கு நாட்களுக்குப் பிறகே காய்ச்சல், தலைவலி, உடல் நோவு முதலியன ஏற்படும். அதன்பின் கொப்புளங்கள் தேன்றத் தொடங்கும், அம்மை நோயின் கடுமை உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவைக் கொண்டு பலவிதத் தோற்றங்களில் அமைகின்றன. முன்பே அம்மை குத்திக் கொண்டிருந்தால் சின்னம்மைபோல் சிறிய அளவில் தோன்றி மறைந்துவிடும்.

அம்மைக் கொப்புளங்கள் நீர்க் கோர்வையோடு தோன்றி, பின் சீழ் உடையனவாக வெண்மைத் தோற்றம் பெறும். இக்கொப்புளங்கள் பின்னர் உடைந்து புண்களாகின்றன. இப்புண்கள் சில சமயம் அழுகல் நிலையை அடைவதுமுண்டு.

அம்மை குத்திக் கொண்டவர்களில் ஒரு சிலரே இந்நோய்க்காளாகின்றனர். ஒருமுறை அம்மை நோய் கண்டவர்க்கு மீண்டும் அம்மை நோய் வருவது மிக அரிது. காரணம், அம்மை நோயால் பாதிக்கப்பட்ட அவர் உடல் இந்நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற்று விடுவதேயாகும்.

அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களை உடனே அப்புறப்படுத்திவிட வேண்டும். அல்லது தனிமைப் படுத்திவிட வேண்டும். நகரங்களில் வாழ்பவர்கள் அதற்கென்று உள்ள ‘தொற்று நோய் மருத்துவ நிலையங்களில் சேர்த்துவிட வேண்டும். இதன்மூலம் இந்நோய் மற்றவர்கட்குப் பரவாமல் தடுத்திட முடியும்.

உலகம் முழுவதும் இந்நோய் ஒழிப்பில் முனைப்புக் காட்டியதன் விளைவாக, இந்தியா உட்பட உலகநாடுகள் பலவற்றிலும் இந்நோய் முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக ஒவ்வொருவரும் அம்மைக் குத்திக் கொள்ள வேண்டும்.