இளையர் அறிவியல் களஞ்சியம்/பெனிசிலின்

விக்கிமூலம் இலிருந்து

பெனிசிலின் : ஆங்கில விஞ்ஞானி அலெக்சாண்டர் பிளெமிங் என்பவர் தம் சோதனைக் கூடத்தில் பணியாற்றிய போது சற்றும் எதிர்பாராமல் கண்டுபிடித்த அற்புத மருந்தே 'பென்சிலின்' ஆகும். ஒரு சமயம் அவர் லண்டன் மருத்துவமனை ஒன்றின் ஆய்வுக் கூடத்தில் மனிதர்களுக்கு நோயுண்டாக்கும் பாக்டிரியாக்கள் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அப்போது பாக்டிரியாக்களை வளர்ப்பதற்கென அங்கே வைக்கப்பட்டிருந்த சிறிய தட்டு ஒன்றில் நீலங்கலந்த பச்சை நிறப் பூஞ்சக்காளான் படிந்திருப்பதைக் கண்ணுற்றார். அப்பூஞ்சக்காளானைச் சுற்றிலும் இருந்த பாக்டீரியாக்கள் முற்றாக அழிக்கப்பட்டிருந்தது அவர் கவனத்தை ஈர்த்தது. அப்பூஞ்சக்காளான் பகுதியை முனைப்புடன் ஆராய்ந்தார். பாக்டீரியாக்களின்

பெரிதாக்கப்பட்ட பென்சிலின் பூஞ்சைக் காளான்

அழிவுக்குப் பூஞ்சக் காளானிலிருந்த பொருளே காரணம் எனக் கண்டறிந்தார். அப்பொருளை "பெனிசீலியம்’ என அழைத்தார். பூஞ்சக் காளானில் உள்ள பெனிசீலியப் பொருளிலிருந்து சுரக்கும் சுரப்புப் பொருளே பெனிசிலின் ஆகும். பெனிசிலின் மருந்து நோயுண்டாக்கும் பாக்டீரியாக் கிருமிகளை அழிக்குமே தவிர உயிரணுக்களுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படுத்துவதில்லை. இதுவே பெனிசிலின் தனித் தன்மையாகக் கருதப்படுகிறது.

பெனிசிலினைப் பிளெமிங் 1928இல் கண்டுபிடித்த போதிலும் 1989ஆம் ஆண்டில் தான் முழுமையான மருந்தாகத் தயாரித்துப் பயன்படுத்தப்பட்டது. அவ்வாறு தயாரிப்பதில் பிளெமிங்குக்குப் பேருதவி புரிந்தவர்கள் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஹோவர்டு புளோரி, எர்னெஸ்ட் செயின் ஆகியோராவர். இவர்கள் மூவருக்கும் இம்மருந்தைக் கண்டுபிடித்ததற்காக 1945 இல் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பெனிசிலின் மருந்து தயாரானபோது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. போர்க்காலத்தில் காயம்பட்டவர்களுக்கும் நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கும் அருமருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. பல்லாயிரவர் உயிர்களைக் காத்ததால் இம்மருந்தின் சிறப்பும் புகழும் மின்னல் வேகத்தில் உலகெங்கும் பரவியது. அதற்கேற்ப பெனிசிலின் மருந்தின் உற்பத்தியும் பன்மடங்கு பெருகியது. தொடக்கத்தில் விலையுயர்ந்த மருந்தாக இருந்த பெனிசிலின் பின்னர் விலை குறைந்து மலிவு மருந்தாக ஆகி அனைவருக்கும் பயன்படலாயிற்று.

ஆன்டிபயோட்டிக் என அழைக்கப்படும் பாக்டீரியா கிருமி எதிர்ப்பு மருந்தான பென்சிலின் திரவமாகவும், பொடியாகவும், மாத்திரையாகவும் களிம்பாகவும் கிடைக்கிறது. இம்மருந்து உலகெங்கும் இன்று தயாரித்துப் பயன்படுத்தப்படுகிறது.