இளையர் அறிவியல் களஞ்சியம்/பொட்டாசியம்
பொட்டாசியம் : கார உலோகங்களில் ஒன்றான பொட்டாசியம் ஒரு தனிமம் ஆகும். இது வெள்ளிபோலத் தோற்றமளிக்கும். மிகவும் மென்மைத் தன்மையுடையதாகும். கனம் குறைந்த இத்தனிமத்தை நீரில் போட்டால் அமிழாமல் மிதக்கும் தன்மையுடையது. நீரில் இருக்கும்போது அதனுடன் வினைப்பட்டு வெப்பத்தை வெளிப்படுத்தும், அவ்வெப்பத்தின் விளைவாக நீரிலுள்ள ஹைட்ரஜன் வாயு வெளிப்படும். வெப்ப மிகுதி காரணமாக ஹைட்ரஜன் தீப்பற்றி எரியும். மேலும், பொட்டாசியம் காற்று, ஈரம் ஆகியவற்றோடு எளிதில் வினைப்படுவதால் இதை எப்போதும் மண்ணெண்ணெயில் போட்டு வைப்பது வழக்கம்.
பொட்டாசியம் தனியே கிடைப்பதில்லை. கூட்டுப் பொருளாகப் பெஸ்பார் பாறைகளில் கிடைக்கிறது, சாக்கடல், சியர்ல்ஸ் ஏரி ஆகியவற்றில் உள்ள நீர்களில் கரைந்து கிடைக்கிறது. இந்தியாவில் கங்கைச் சமவெளிப் பகுதிகளில் படிவுகளாகவும் பஞ்சாப், ஒரிசா, பீகார், உத்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் வண்டல் மண்ணாகவும் கிடைக்கிறது.
பொட்டாசியத்தை மின்பகுப்பு முறையில் முதன்முதலாக 1909இல் பிரித்தெடுத்தவர் டேவி என்னும் ஆங்கில விஞ்ஞானியாவார்.
பொட்டாசியம் தனியாகப் பயன்படுவதில்லை. மற்ற தனிமங்களோடு சேர்ந்த கூட்டுப் பொருளாக ஆகிய பின்னரே பெரும் பயன்தருகிறது.
பொட்டாசியம் குளோரேட் ஒரு ஆக்சிகரணியாகும். தீக்குச்சிகள் செய்யவும் பட்டாசு போன்ற வானவெடிகள் செய்யவும் பயன்படுகிறது. பொட்டாசியம் நைட்ரேட் வெடி மருந்துகள் செய்யப் பயன்படுகிறது. பொட்டாசியம் அயோடைடு வேதியியல் பகுப்புகளிலும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பொட்டாசியம் புரோமைடு ஒளிப்படத் தொழிலில் பயன்படுத்தப்படுகிறது. பொட்டாசியம் பெர்மங்கனேட் தோல் தொழிலும் மரத் தொழிலிலும் சாயப்பொருளாகப் பயன்படுகிறது. மருந்துப் பொருட்களில் கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. பொட்டாசியம் டை குரோ மைட் ஆற்றல் மிகு ஆக்சிகரணியாக இருப்பதால் தோல் பதனிட்டுத் தொழிலில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. உலோகப் பொருட்களுக்குப் பளபளப்பூட்டும் குரோமியப் பூச்சுத் தரப் பெரிதும் பயன்படுகிறது. பொட்டாசியம் சயனைடு கொடிய நச்சுப் பொருளாகும். இதைக் கொண்டு பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. பொட்டாசியம் புளோரைடைக் கொண்டு புளோரின் வாயு தயாரிக்கப் படுகிறது.
பொட்டாசியம் இவ்வாறு நம் வாழ்விற்கான பல்வேறு துறைகளிலும் பயன்படக் கூடிய இன்றியமையாப் பொருளாக அமைந்துள்ளது.