உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/மகரந்தம்

விக்கிமூலம் இலிருந்து

மகரந்தம் : தாவரங்கள் இனப் பெருக்கம் செய்துகொள்ள அடிப்படையாக அமைவன மகரந்தத் துகள்களாகும். மகரந்தத் துகளினுள் ஆண் அணுஉட்கரு அமைந்துள்ளது. மகரந்தத் துகள்கள் சாதாரணமாகப் பார்ப்பதற்கு மஞ்சள் நிற வண்ணமுடையனவாகத் தோற்றமளிக்கும். இவை நுண்ணிய பொடி வடிவில் அமைந்துள்ளன.

மகரந்தத் துகள் பொடிகள் தாவரத்தில் பூவில் அமைந்துள்ள மகரந்தப் பையில் உருவாகின்றன. நீண்ட இப் பையில் எண்ணற்ற மகரந்தத் துகள்கள் உண்டாகின்றன. சாதாரணமாக மகரந்தத் துகள்கள் உருண்டை வடிவினவாக அமைந்திருக்கும். மகரந்தப்பை நன்கு வளர்ச்சி பெற்று முற்றி வெடிக்கும். அப்போது பையிலுள்ள மகரந்தப் பொடிகள் வெளிப்பட்டு பையின் மேல் விளிம்புகளில் தங்கியும் தொங்கிக் கொண்டுமிருக்கும். அப்போது அவற்றின் மீது விசையோடு மோதிச் செல்லும் காற்று மூலமும் பூவிலுள்ள தேனை உறிஞ்ச வரும் வண்ணத்துப் பூச்சு போன்ற வைகளின் கால்களில் ஒட்டிக் கொள்வதன் மூலமும் பிற பூக்களில் உள்ள இனப் பெருக்கச் சூலகத்தை அடைகின்றன. இதுவே மகரந்தச் சேர்க்கை என அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு மகரந்தத் துகளிலும் உள்ளுறை, வெளியுறை என இரு வகையான உறைகள் அமைந்துள்ளன. இப்பொருள் கெட்டித்தன்மையும் மெழுகுத்தன்மையும் கொண்டதாக அமைந்திருப்பதால் மகரந்தத் துகள் தவறி நீரில் விழுந்து விட்டால் கூட அதன் உயிர்ப்புத் தன்மை பாதிப்பதில்லை.