இளையர் அறிவியல் களஞ்சியம்/மின்கலங்கள்
மின்கலங்கள் : வேதியியல் மாற்றங்களால் மின் சக்தி உண்டாக்கும் கலங்கள் 'மின் கலங்கள்' என அழைக்கப்படுகின்றன. மின் கலங்கள் சாதாரணமாக பிரதம மின்கலம், துணை மின்கலம் என இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் பிரதம மின்கலத்தில் உள்ள வேதிப் பொருட்களை அடிக்கடி மாற்றி புதுப்பிக்க வேண்டியிருக்கும். இவ்வகையில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மின்கலம் 'வோல்ட்டா மின்கலம்’ ஆகும். இதனை 1799ஆம் ஆண்டில் வோல்ட்டா எனும் இத்தாலிய அறிவியலறிஞர் கண்டுபிடித்தார். இஃது அவர் பெயராலேயே அழைக்கப்படலாயிற்று.
வோல்ட்டா மின் கலத்தில் கண்ணாடிப் பாத்திர மொன்றில் நீர்த்த கந்தகமிலம் நிரப்பப்பட்டு அதில் ஒருபுறம் செப்புத் தகடும் மறுபுறம் துத்தநாகத் தகடும் வைக்கப்பட்டிருக்கும். இவற்றின் வெளி முனைகளை செப்புக் கம்பிகளால் இணைத்து, அவ் விணைப்புப் பகுதியில் ஒரு மின் விளக்கை வைத்தால் விளக்கு எரிவதைக் காணலாம். இதுவே வோல்ட்டா மின்கல அமைப்பாகும்.
இதே போன்ற முறையில் அமைந்து செயல்படுவதே 'பேட்டரி லைட்' எனும் கை விளக்கில் உள்ள பசை மின்கலங்கள். இதில் வேதிப்
பொருள்கள் திரவ வடிவில் இல்லாது ஒரு வகைக் கெட்டிப்பசை வடிவில் வைக்கப்பட்டிருக்கும். வோல்ட்டா மின் கலத்தில் உள்ள திரவப் பொருளை குறிப்பிட்ட காலத்திற்குப்பின் மீண்டும் மின் விசை பெற மாற்ற வேண்டும். ஆனால் பசை மின்கலத்தில் மின்சக்தி குறையும்போது பசை மின்கலத்தைப் பயனற்றவையாக எரிந்துவிட வேண்டியிருக்கும்.
இரண்டாவது வகை மின்கலங்கள் துணை மின் கலங்கள் என அழைக்கப்படுகின்றன. இதற்குரிய எடுத்துக்காட்டாக மோட்டார் காரில் பயன்படுத்தப்படும் மின்கலத்தைக் கூறலாம். இதைச் சேமக்கலம் எனவும் கூறுவர். இதில் மின் உற்பத்தித் திறன் குறையும்போது மீண்டும் அதனுள் மின்சக்தியை வெளியிலிருந்து பாய்ச்சினால் அதில் உள்ள வேதிப் பொருட்கள் வினைப்பட்டு மீண்டும் மின்சக்தியை உருவாக்கும் திறனைப் பெறுகின்றன.
இவ்வாறு மின்னேற்றம் (Charging) பெறுவதால் இம் மின் கலம் பழைய நிலையை அடைந்து மின் சக்தி தரப் பயன்படுகினறது. இவ்வகையான சேமக்கலங்களே தந்தி, தொலைபேசி நிலையங்களிலும், ரயில், கப்பல், விமானம் மற்றும் கார் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. ஆயினும் இவற்றிலிருந்து அதிக அளவில் மின்சக்தி பெற இயலாது. குறைந்த அளவு மின் சக்தியே கிடைக்க இயலும், சாதாரணமாகப் பசை மின்கலம் ஒன்றில் 1.50 வோல்ட் மின் அழுத்தம் கிடைக்க இயலும். இவற்றில் பலவற்றைத் தொடரிணைப்பில் இணைத்துப் பயன்படுத்தும் போது எத்தனை பசை மின்கலம் இணைக்கப் பட்டுள்ளதோ அதன் எண்ணிக்கைக்கேற்ப அதிக மடங்கு மின்சக்தி பெற இயலும்.
டிரான்சிஸ்டர், வானொலிப் பெட்டிகளுக்கு நான்கு அல்லது ஆறு பசை மின்கலங்கள் பயன்படுத்தப்படுகின்றன . கார்களில் 12 வோல்ட் மின் அழுத்தம் தரும் மின் சேமக் கலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.